ஓஎம்பி அதிகாரிகள் அச்சுறுத்துகின்றனர்! – காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை.

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு வலியுறுத்திப் போராடிவரும் தம்மை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் அச்சுறுத்துவதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனக்கூறி மிரட்டுவதாகவும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
    
இதுகுறித்து கருத்து வெளியிட்ட வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி,
நீதியைக்கோரி 2000 நாட்களுக்கும் மேல் போராடிவரும் தமது சங்கத்தின் உறுப்பினர்கள் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் கடிதங்கள் ஊடாகத் தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக இழப்பீடு மற்றும் மரணச்சான்றிதழ் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு வலியுறுத்தி தமது சங்கத்தில் அங்கம்வகிக்கும் தாய்மாருக்கு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் கடிதங்கள் அனுப்பப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், ‘ஏனையோர் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். எனவே நீங்கள் அச்சப்படாமல் வருகைதந்து பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுங்கள்’ என்று தொலைபேசி அழைப்பின் ஊடாக மீளவலியுறுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோன்று இவ்வாறு கடிதம் மூலம் 3 தடவைகள் அழைக்கப்பட்டதன் பின்னரும், அலுவலகத்துக்கு வருகைதராதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் தமது சங்க உறுப்பினர்களை அச்சுறுத்துவதாகவும் மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்தார்.

‘அடுத்துவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் பதில் கூறவேண்டிய நிலையில் இலங்கை இருக்கின்றது. எனவே பாதிக்கப்பட்ட தாய்மாரை இவ்வாறு அச்சுறுத்துவதன் ஊடாக அவர்களுக்கு மரணச்சான்றிதழையும் இழப்பீட்டையும் வழங்கிவிட்டு, அதனை மனித உரிமைகள் பேரவையில் ஒரு வெற்றியாகக் காண்பிப்பதற்கு அரசாங்கம் முற்படுகின்றது’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!