தமிழகத்தில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!

தமிழகத்தில் ஓராண்டில் மட்டும் 288 கோடி ரூபாய் மக்கள் பணம், சைபர் குற்றாவாளிகளால் திருடப்பட்டிருப்பதாக `அதிர்ச்சித் தகவல்’ கூறுகிறது மாநில சைபர் பிரிவு காவல்துறை. `ஓராண்டில் 288 கோடி ரூபாயா?’ என மக்கள் அச்சம் தெரிவிக்கும் வேளையில், இந்தக் குற்றச் சம்பவங்களின் பின்னணி குறித்து சைபர் பிரிவு காவல்துறையினரிடம் விசாரித்தோம்.

`வங்கியிலிருந்து பேசுகிறோம்’ என்றும், `உங்களுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது’ என்றும் மோசடிக்கு மூலப்பொருள்களான, மெசேஜ், லிங்க்குகளை வீசி, மக்களை ஏமாற்றி பணத்தைக் கொள்ளையடிக்கின்றன… இந்த சைபர் க்ரைம் கேங்குகள். போதாத குறைக்குப் பணப் பரிவர்த்தனைகளைக் கையாளும் மொபைல் ஆப்களும் அதிகரித்துவிட்டன.

அந்த வகையில் லோன் ஆப் மோசடி, லிங்க் மோசடி, ஓ.டி.பி மோசடி, டெலிகிராம் மூலம் தொடர்புகொண்டு மோசடி செய்வது, பான்கார்டு, க்ரெடிட் கார்டு எனப் பல வகைகளில் பொதுமக்களின் பணத்தைச் சுருட்டியிருக்கின்றன இந்தப் பணமோசடிக் கும்பல்கள். கடந்த ஓராண்டில் நடந்த பணமோசடி சம்பவங்கள் தொடர்பாக, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது தமிழக சைபர் பிரிவு காவல்துறை.
அதன்படி…

– ஓராண்டில் மக்களிடமிருந்து பல வகைகளில் 288 கோடி ரூபாய் திருடப்பட்டிருக்கிறது.
– சுமார் 60,000 புகார்கள் இந்த ஓராண்டில் மட்டும் பெறப்பட்டிருக்கின்றன.
– புகாரளித்த மக்களின் 27 கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.
– 106 கோடி ரூபாய் குற்றவாளிகள் வசம் சென்றுவிடாதபடி நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.
– ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மட்டும் 12,000 புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன.
– மேற்குறிப்பிட்ட மூன்று மாதங்களில் திருட்டுப்போன 67 கோடி ரூபாயில், 49 கோடி ரூபாய் முடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 6 கோடி ரூபாய் மீட்கப்பட்டிருக்கிறது.
– கடந்த இரண்டாண்டுகளில் சைபர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 29 பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
– சைபர் குற்றங்களைத் தவிர்க்கும்நோக்கில் கடந்த 45 நாள்களில் 27,905 போலி சிம்கார்டுகளை முடக்க தமிழக சைபர் பிரிவு காவல்துறை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. அதன்படி, 22,440 சிம்கார்டுகள் முடக்கப்பட்டிருக்கின்றன.
– 2023-ம் ஆண்டில் இதுவரை 221 லோன் ஆப்களும், 49 போலி இணையதளங்களும் முடக்கப்பட்டிருக்கின்றன.
– நாளொன்றுக்கு `1930′ என்ற சைபர் தடுப்புப் பிரிவுக்குப் புகாரளிக்க, சுமார் 600 அழைப்புகள் வந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறது தமிழக சைபர் பிரிவு காவல்துறை.

இது தொடர்பாக நம்முடன் பேசிய சைபர் வல்லுநர் ஒருவர், “சைபர் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரிப்பதை உணரமுடிகிறது. `லோன் தருகிறோம்’ என நைஸாகப் பணம் பறித்துவிடும்போக்கு, நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வும் பொதுமக்களிடம் குறைவாக இருக்கிறது என்பதும் உண்மையே. பெட்டிக்கடை முதல் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வரை இன்று ஆன்லைன் பரிவர்த்தனை வந்துவிட்டது. வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்வதுபோல் பணப் பரிமாற்றமும் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது.

மக்கள், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் பெரிதாகக் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருக்கின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகளைத் தள்ளிவைத்துவிட்டு நம்மால் நாள்களை நகர்த்துவது மிகவும் கடினம். ஆகவே, பாதுகாப்பான முறையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை முறையாக மேற்கொள்வது, அபாயம் மிகுந்த ஆப்களையும், பணமோசடி செய்யும் லோன் ஆப்களையும், பணமிழக்கும் வாய்ப்புகள்கொண்ட ஆன்லைன் விளையாட்டுகளிலிருந்தும் தப்பித்திட மக்கள் விழிப்புணர்வுடன் இருந்திட வேண்டும்.

சந்தேகமுள்ள செயல்பாடுகளைத் தகுந்த ஆலோசனை பெற்ற பிறகே பின்பற்றிட வேண்டும்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, பணமோசடிக் கும்பல்களின் சதிச் செயல்களைக் கட்டுப்படுத்துவதும் சைபர் பிரிவு காவல்துறையின் தலையாய கடமை. சைபர் குற்றங்கள் தொடர்பாகப் புகார் செய்ய www.cybercrime.gov.in என்ற தளம் இருக்கிறது. ஒருமுறை புகார் செய்துவிட்டால் காவல்துறையே நம்மை அணுகும். மேலும், எந்தக் காவல் நிலையத்திலும் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களைப் பதிவுசெய்யலாம்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!