இந்தோ – பசுபிக் மாநாட்டுக்காக சுவீடன் பயணமானார் அலி சப்ரி!

இந்தோ – பசுபிக் பிராந்திய அமைச்சர்மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வியாழக்கிழமை சுவீடன் பயணமானார். இரண்டாவது இந்தோ – பசுபிக் அமைச்சர்மட்ட மாநாடு சுவீடனின் ஸ்ரொக்ஹோம் நகரில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
    
ஐரோப்பிய வெளிவிவகார செயற்பாட்டுப்பிரிவுடன் இணைந்து சுவீடனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இந்தோ – பசுபிக் பிராந்திய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இம்மாநாட்டுக்கு சுவீடன் வெளிவிவகார அமைச்சர் ரொபியஸ் பில்ஸ்ரோம் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித்தலைவர் ஜோஸப் பொரெல் ஆகியோர் தலைமைதாங்கவுள்ளனர்.

அதேவேளை இம்மாநாட்டில் ‘அனைவரும் ஒன்றிணைந்து நிலைபேறானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான சுபீட்சத்தைக் கட்டியெழுப்பல்’ என்ற தலைப்பில் நடைபெறவுள்ள முதலாவது வட்டமேசை கலந்துரையாடலுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமைதாங்கவுள்ளார்.

மேலும் அமைச்சர் அலி சப்ரி இம்மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் சுவீடன், ஆஸ்திரியா, டென்மார்க், பின்லாந்து, லத்வியா, நெதர்லாந்து, ரோமானியா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!