கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட தி.மு.க. முடிவு!

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3-ந் தேதி தொடங்குகிறது. இந்த விழாவை பிரமாண்டமாக கொண்டாட தி.மு.க. தலைமை திட்டமிட்டு உள்ளது. நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தில் கட்சி வளர்ச்சி பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டன. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது.
    
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம் வருமாறு:- கருணாநிதி நூற்றாண்டு விழா திருக்குவளையில் பிறந்து, திருவாரூரில் வளர்ந்து, உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்த நம் ‘தமிழின தலைவர்’ கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வருகிற ஜூன் 3-ந் தேதி தொடங்குகிறது. கருணாநிதியின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களையும் ஓராண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழுமை அடையாது என்றாலும், தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவை எழுச்சியோடும், உணர்ச்சியோடும் எங்கெங்கும் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

பொதுக்கூட்டம் ஜூன் 3-ந் தேதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வடசென்னையில் நடைபெற இருக்கிறது. ஜூன் 20-ந் தேதி திருவாரூரில் எழிலுற அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். இந்த விழா, முழுநாள் நிகழ்வாக கவியரங்கம், பட்டிமன்றம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

உருவச்சிலைகள் கருணாநிதி நூற்றாண்டு விழாவை மாவட்டங்கள்தோறும் மிகச் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற ஜூன் 3-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு (2024) ஜூன் 3-ந் தேதி வரை ஓராண்டு காலத்திற்கு தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை திட்டமிட்டு நடத்திட வேண்டும். ஒவ்வொரு நிகழ்வும் திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கமாகவும், கருணாநிதியின் அளப்பரிய சாதனைகளை மக்களின் நெஞ்சில் பதியச் செய்யும் வகையிலும் அமைந்திட வேண்டும். ஜூன் 3-ந் தேதி கிளைக்கழகங்கள் தொடங்கி அனைத்து அமைப்புகளின் சார்பிலும் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும்.

75-ம் ஆண்டில் தி.மு.க. அடியெடுத்து வைக்க இருக்கும் நிலையில், கட்சியின் கொடி கம்பங்கள் இல்லாத கிராமங்களே தமிழ்நாட்டில் இல்லை என்னும் பெருமைமிகு நிலையை எட்டியிருக்கிறோம். கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, ‘ஊர்கள் தோறும் தி.மு.க.’ எனும் தலைப்பில், கிளைக்கழகங்களில் அமைந்துள்ள நமது பழைய கொடி கம்பங்களைப் புதுப்பிக்க வேண்டும். மாவட்டங்கள் தோறும் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, அனுமதி பெற்று, ‘எங்கெங்கும் கலைஞர்’ என்ற அடிப்படையில், கருணாநிதியின் முழு உருவச்சிலை, மார்பளவு சிலைகளை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மூத்த நிர்வாகிகளுக்கு கவுரவம் முக்கியமாக 70 வயதுக்கும் மேலான, அரும்பாடுபட்ட கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு ‘கழகமே குடும்பம்’ எனும் தலைப்பில், பொற்கிழி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களை தேடிச்சென்று கவுரவிக்க வேண்டும். மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கும் வகையிலான நிகழ்வுகளையும், போட்டிகளையும் நடத்தி பரிசுகள் வழங்குவதுடன், கருணாநிதி எழுதிய புத்தகங்களையும் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியினர் குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கலாம்.

பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களை கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘என்றென்றும் கலைஞர்’ எனும் தலைப்பில், கருத்தரங்கம், பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகளும் நடத்தப்பட வேண்டும். இத்தகைய கூட்டம் நடைபெறும் இடம், தேதி பட்டியலை மாவட்ட நிர்வாகங்கள் மூலம் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். ஆண்டு முழுவதும் கொண்டாட… இன்றைய சூழலுக்கேற்ப கணினி, இன்டர்நெட் வசதிகளுடன் கூடிய நவீனமான கலைஞர் நூற்றாண்டு படிப்பகங்களை தொடங்க வேண்டும்.

அது பொதுமக்களுக்கு உதவிடும் மையங்களாக திகழ்ந்திட வேண்டும். கட்சியில் உள்ள அனைத்து அணிகளின் சார்பிலும் ஓராண்டு முழுவதும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் செயல்திட்டத்தை உருவாக்கி, தலைமை அலுவலகத்தின் அனுமதியை பெற்று, இளைய தலைமுறை பயன்பெறும் வகையில் நடத்த வேண்டும். நூற்றாண்டு விழாவை முனைப்பாகவும், முழுமையானதாகவும், பயனுள்ள வகையிலும் ஆண்டு முழுவதும் கொண்டாடுவது என கூட்டம் தீர்மானிக்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!