அரச பயங்கரவாதத்தை தக்க வைக்கும் கலாசாரத்தையே அரசாங்கம் முன்னெடுக்கிறது!

ஊடகங்களின் ஊடாக வெளிக்கொணரும் உண்மைகளை மூடி மறைப்பது தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் இருப்புக்கு தேவைப்படும் முக்கிய விடயமாகும். அந்த இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு வெவ்வேறு காலப்பகுதியில் வெவ்வேறு வகையானசட்ட மூலகங்களை உருவாக்கி கொள்ள முயற்சிக்கிறது. அதனை நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் ஜனநாயக விரோத மற்றும் அரச பயங்கரவாதத்தை தக்க வைக்கும் கலாசாரத்தையே அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
    
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் தொடர்பில் ஊடகவியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகங்களின் ஊடாக வெளிக்கொணரும் உண்மைகளை மூடி மறைப்பது தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் இருப்புக்கு தேவைப்படும் விடயமாகும். இவர்கள் அங்கீகாரமில்லாத தரப்பு மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்படும் தரப்பு என மக்களால் விமர்சிக்கப்படும் அரசாங்கமாகும்.
இந்நிலையில் குறித்த தரப்பினரின் இருப்பு என்பதே ஒரு மோசடியாகும். இந்த மோசடிக்காரர்கள் தங்களுடைய அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள எப்படியாவது உண்மைகளை மூடி மறைக்க வேண்டும். அதில் ஒன்று தான் தற்போது ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் சட்ட மூலமாகும்.

முன்னதாக அவர்கள் பயங்கரவாத சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தி வந்தனர். இருப்பினும் சர்வதேசத்தின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அந்த சட்டத்தை நீக்கி புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எனும் பெயரில் அதேபோன்றதொரு சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு முயற்சித்தார்கள். குறித்த சட்ட மூலமும் பாரதூரமானது. அது ஊடகங்களை குறி வைத்து உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் தற்போது ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவை நிறுவி சட்டமூலம் தயாரிப்பு என்பது ஊடகங்களையும்,சில உண்மைகளையும் வெளிக்கொணரும் ஊடகங்களையும் முன்கூட்டியே இனங்கண்டு, ஊடகங்களை சுற்றிவளைத்து, அவற்றின் தகவல்களை பறித்து, இந்த ஊடகங்களுக்கு தகவல் வழங்கும் தரப்பினர்களையும் அடையாளங்கண்டு,அவர்களுக்கு தண்டனை வழங்கும் சட்டமொன்றை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்துள்ளார்கள்.

ஜனநாயகத்தை நிலைநாட்டும் போர்வையில் இவ்வாறான பயங்கரமான சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். இவை அனைத்தும் ஜனநாயக விரோத மற்றும் அரச பயங்கரவாதத்தை தக்க வைக்கின்ற கலாசாரத்தையே அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கிறது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!