பட்டமளிப்பு விழா மேடையில் சுருண்டு விழுந்த ஜோ பைடன்!

கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப்படை அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஜோ பைடன் சுருண்டு விழுந்துள்ளார். அமெரிக்க வரலாற்றில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மிக வயதான ஜனாதிபதி ஜோ பைடன். இந்த நிலையில் கொலராடோவில் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் தடுமாறி விழுந்த ஜோ பைடனை துரிதமாக செயல்பட்ட விமானப்படை அதிகாரிகள் உதவியுள்ளனர்.
    
ஆனால் அதன் பின்னர், உதவி ஏதுமின்றி, அவர் நடந்து சென்று தமது இருக்கையில் அமர்ந்துள்ளார். விழாவின் போது சுமார் ஒன்றரை மணி நேரம் ஜனாதிபதி ஜோ பைடன் நின்ற நிலையில் 921 பேர்களுக்கு பட்டமளித்துள்ளதுடன் அவர்களுடன் கைகுலுக்கி பாராட்டியுள்ளார்.

இந்த நிலையில், வெள்ளைமாளிகை அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், ஜனாதிபதி நலமாக இருக்கிறார், பாதிப்பு ஏதுமில்லை என குறிப்பிட்டுள்ளனர். விழா நடந்த மேடையில் மணல் மூட்டைகள் காணப்பட்டுள்ளன.

ஜனாதிபதி பைடன் அந்த மணல் மூட்டை ஒன்றில் மிதித்து கால் தடுமாறி விழுந்துள்ளார் என்றே முதற்கட்ட தகவலில் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி பைடன் தடுமாறி விழுந்த சில நிமிடங்களில் விழாவும் முடிவுக்கு வந்துள்ளது.

இதனையடுத்து தமது வாகனம் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு அவர் தாமாகவே நடந்து சென்றுள்ளார். ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் அவரது வயது மூப்பை காரணமாக குறிப்பிட்டு, இன்னொருமுறை அவர் ஜனாதிபதி பொறுப்புக்கு தகுதியற்றவர் என விமர்சனங்கள் முன்வைக்கின்றனர். மட்டுமின்றி, பெரும்பாலான அமெரிக்க வாக்காளர்கள் அவரது வயதை குறிப்பிட்டு கவலை தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவர் வென்றால், அவரது வயது 82 என இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!