தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது!

தேர்தலை நடத்தாமல் எந்த அரசியல் கட்சிக்கும் 50 சதவீத பலத்தை பெற முடியாது என ஜனாதிபதியால் எவ்வாறு குறிப்பிட முடியும். தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது. தேர்தலை நடத்தினால் நாட்டு மக்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறையற்ற வகையில் பிற்போடப்பட்டுள்ளமைக்க எதிராக எதிர்வரும் வாரம் உயர்நீதிமன்றத்தில் பிறிதொரு அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்வோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
    
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டு மக்களுக்கு தேர்தல் மற்றும் அரசியல் முறைமை மீது நம்பிக்கை இல்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார். 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை மக்கள் அரசியலில் இருந்து முழுமையாக புறக்கணித்ததை ஜனாதிபதி மறந்து விட்டார்.

தேர்தல் ஒன்றை நடத்தாமல் எந்த அரசியல் தரப்புக்கும் 50 வீத பலத்தை பெற முடியாது என ஜனாதிபதியால் எவ்வாறு குறிப்பிட முடியும். தேர்தல் ஒன்றை நடத்தினால் நாட்டு மக்கள் ரணில்- ராஜபக்ஷர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதை முன்கூட்டியதாக அறிந்துள்ள காரணத்தால் தான் அரசாங்கம் தேர்தலை கண்டு அச்சமடைகிறது.

நிதி நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என அரசாங்கம் குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும்.உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக பல விடயங்களை பெற்றுக்கொண்டுள்ளோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பை கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தது.தேர்தல் நடவடிக்கைகளுக்கு 246 கோடி ரூபா தேவை என தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த மார்ச் மாதம் ஏழாம் திகதி திறைசேரியின் செயலாளரிடம் உத்தியோகப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ‘நிதி விடுவிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.சாதகமான பதில் கிடைத்ததும் தேவையான நிதி விடுவிக்கப்படும்’ என மார்ச் ஏழாம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.

வாக்கெடுப்புக்கு தேவையான நிதியை தேர்தல்கள் ஆணைக்குழு ஒரே கட்டமாக கோரவில்லை. கட்டம் கட்டமாகவே கோரியுள்ளது. இவ்வாறான பின்னணியில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை விடுவிக்க அரச வருமானம் போதுமானதாக இல்லை,கையிருப்பில் ரூபா இல்லை என நிதியமைச்சு குறிப்பிட்ட கருத்தை தகவலறியும் உரிமை சட்டம் பொய்யாக்கியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 17790 கோடி ரூபா வருமானத்தை நிதியமைச்சு ஈட்டியுள்ளது.அரச செலவுகளுக்காக 15676 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 2141 கோடி ரூபா சேமிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 27175 கோடி ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் 20862 கோடி ரூபா அரச செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டு 6313 கோடி ரூபா சேமிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் அரச செலவுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதன் பின்னர் 8427 கோடி ரூபா மிகுதியாகியுள்ளது.மார்ச் மாதம் 25 ஆம் திகதி உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்கு 246 கோடி ரூபாவை மாத்திரம் கோரியுள்ளது.அரசாங்கத்துக்கு வாக்கு இல்லாத காரணத்தால் நிதி இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

பொய்யான காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட்டுள்ளது.ஆகவே அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் வாரம் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!