சி.பி.ஐ-க்கு எதிராக தமிழக அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு!

மத்திய புலனாய்வுத் துறை மீது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை, இதனால் சிபிஐ வரம்புகள் எந்த அளவு மாநிலத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த கட்டுரை விவரிக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக இரண்டாம் உலக போரின் போது நாடு முழுவதும் நிதி திரட்டப்பட்டது, ஆனால் அவற்றில் முறைகேடுகள் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததுடன் ஊழலும் தலைதூக்கியது.
    
அப்போது மாகாண அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறையால் இதனை சமாளிக்க முடியாததால், தேசிய அளவிலான விசாரணை அமைப்பு ஒன்றின் தேவை அதிகரித்தது. இதனால் 1942ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சிறப்பு காவல்படை ஒன்று அமைக்கப்பட்டது, இதன் தேவை சுதந்திரத்திற்கு பிறகும் இருந்ததால், 1946ம் ஆண்டு டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் என்பது இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தின் இரண்டாவது பிடிவின் படி மத்திய அரசின் ஆட்சி அதிகாரங்களுக்கு கீழ் உள்ள பகுதியில் நேரடி விசாரணை நடத்த சி.பி.ஐ-க்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது. மேலும் பிற மாநிலங்களில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றால் சி.பி.ஐ அந்தந்த மாநில அரசுகளிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் கடந்த 1989 மற்றும் 1992 ஆண்டுகளில் சிலவகை வழக்குகளை விசாரிக்க பொதுவான முன்அனுமதியை மாநில அரசுகள் சிபிஐ அமைப்புகளுக்கு வழங்கி இருந்தனர்.

மத்திய புலனாய்வு அமைப்பு இனி தமிழகத்தில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் தமிழக அரசிடம் முன் அனுமதி வாங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அப்படியென்றால் தமிழக அரசு மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ-க்கு வழங்கி வந்த முன் அனுமதியை நீக்கியுள்ளது என்பதே அர்த்தம். இந்த முன் அனுமதியை திரும்ப பெற்ற மாநிலங்களில் தமிழகம் 10 மாநிலமாக உள்ளது.

இதற்கு முன்னதாக சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், கேரளா, மேகாலயா, மிசோரம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்கள் முன் அனுமதி நடவடிக்கையை நீக்கி நடவடிக்கை எடுத்து இருந்தனர். சிபிஐ அமைப்புகள் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு எதிர்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக மாறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து மாநிலங்கள் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டன.

முன் அனுமதி திரும்ப பெறப்பட்டு விட்டதால் தமிழகத்தில் வசிக்கும் நபர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றால் சி.பி.ஐ தமிழக அரசிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறை புதிய வழக்குகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். வேண்டும் என்றால் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் மாநில அரசின் முன் அனுமதி இல்லாமல் சிபிஐயால் விசாரணை முன்னெடுக்க முடியும்.

இந்த முன் அனுமதி என்பது சி.பி.ஐ அமைப்பின் வழக்குகளுக்கு மட்டுமே. அமலாக்கத் துறை, தேசியப் புலனாய்வு முகமை, வருமான வரித் துறை ஆகியவை வழக்கம்போலவே வழக்குகளைப் பதிவு செய்து விசாரணையை நடத்த முடியும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!