கேரளாவில் அதிர்ச்சி: 8 மாத குழந்தை மாரடைப்பால் உயிரிழப்பு!

இந்திய மாநிலம் கேரளாவில் 8 மாத குழந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோட்டயம் மணற்காடு பத்தழகுழியைச் சேர்ந்த தம்பதி எபி – ஜோன்சி. இவர்களது 8 மாத ஆண் குழந்தை ஜோஷ். எபி வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது குழந்தை ஜோஷுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
    
இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தைக்கு ஊசி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் குழந்தை திடீரென மூச்சுவிட முடியாமல் தவித்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட தாய் ஜோன்சி அலறியுள்ளார். உடனே பணியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள், நர்ஸுகள் வந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனாலும் குழந்தையை காப்பற்ற முடியவில்லை.

குழந்தைக்கு அளிக்கப்பட்ட Infliximab எனும் அந்த ஊசியை செலுத்தினால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அதனை தெரிந்தே தான் மருத்துவர்கள் குழந்தையின் உடலில் கண்காணிப்பு அமைப்பு எதுவும் இல்லாமல் ஊசி செலுத்தியுள்ளனர் என குழந்தையின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், மருத்துவமனை மீது சுகாதார அமைச்சரிடம் புகாரும் அளித்துள்ளனர். ஆனால், குழந்தைக்கு கடுமையான இதய நோய் இருந்ததாகவும், மருத்துவமனையில் எந்த மருத்துவக் கோளாறும் இல்லை என்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!