டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பில் எச்சரித்த கடற்படை அதிகாரி!

டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் தற்போது ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஏற்கனவே இந்த பயணம் தொடர்பில் அமெரிக்க கடற்படை முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்திருந்தது வெளியாகியுள்ளது. OceanGate நிறுவனத்தின் நீர்மூழ்கிக் கப்பலானது இதுவரை 14 முறை ஆழக்கடலில் சென்று திரும்பியுள்ளது. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நீர்மூழ்கிக் கப்பல் போல் அல்லாமல், ஒரு கப்பலில் இருந்தே தொடர்புடைய நீர்மூழ்கிக் கப்பலை இயக்கவும் கட்டுப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த நிறுவனத்தின் ஐவர் பயணிக்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று புறப்பட்ட 45 நிமிடங்களிலேயே மாயமாகியுள்ள நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளின் சிறப்பு நிபுணர்கள் குழு தீவிரமாக தேடி வருகின்றனர்.

மட்டுமின்றி, அந்த கப்பலில் ஆக்ஸிஜன் சேமிப்பும் கரைந்து வருவதால், இனி சில மணி நேரம் மட்டுமே அந்த கப்பலை மீட்கும் அவகாசம் நிபுணர்கள் தரப்புக்கு உள்ளது எனவும் கூறுகின்றனர்.
ஆனால் ஏற்கனவே குறித்த கப்பலின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்டவையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதும், இப்படியான ஒரு கப்பலில் ஆழக்கடல் பயணம் என்பது ஆபத்தில் முடியும் எனவும் நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுவாக கடற்பரப்பில் இருந்து அரை மைல் தொலைவுக்கு மட்டுமே கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்கள் பயணிக்கின்றன. ஆனால் இவ்வளவு பெரிய ஆழத்திற்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வது என்பது தற்கொலைக்கு ஒப்பானது என நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் அந்த நீர்மூழ்கிக் கப்பலில் 24 மணி நேரத்திற்கான ஆக்ஸிஜன் மட்டுமே எஞ்சியிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!