கோவில்களுக்கு படையெடுக்கும் சீன இளைஞர்கள்!

தடுமாறும் பொருளாதார நிலைமையில் வேலை தேடுவது என்பது கடினமான ஒன்றாக இருப்பதால் சீன இளைஞர்கள் தற்போது கோவில்களுக்கு படையெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன பயண தளமான குனார் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த ஆண்டில் முதல் காலாண்டில் கோவிலுக்கு படையெடுத்துள்ள மக்களின் எண்ணிக்கை 367 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்குகளுக்கு பின்னர் சுற்றுலா மற்றும் கலாச்சார மையங்கள் பல திறந்து செயல்பட தொடங்கியுள்ளதும் இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
ஆனால் மத அடிப்படையிலான தலங்களுக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜனவரி மற்றும் மே மாதங்களில் ஏறக்குறைய 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சிச்சுவானில் உள்ள எமி மலையை பார்வையிட்டுள்ளனர். சீன பௌத்தத்தின் நான்கு புனித மலைகளில் ஒன்று இந்த எமி.

2019ல் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் பார்வையாளர்கள் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இன்னொரு பயண இணைய தளம் குறிப்பிடுகையில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கோயிலுக்குச் சென்றவர்களில் பாதி பேர் 1990க்குப் பிறகு பிறந்தவர்கள் என தெரிவித்துள்ளது.

சீனாவில் மே மாதத்தில் 16 முதல் 24 வயதுடையவர்களில் வேலையற்றோர் எண்ணிக்கை 20.8% என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சிக்கலான பொருளாதாரம் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் கல்வி, கட்டுமானம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக நாத்திகத்தை பின்பற்றி வந்தாலும், பலர் தேவைப்படும் காலங்களில் பண்டைய நடைமுறைகளுக்கு திரும்புவதாகவே கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!