செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள் தெரிவுக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு

இன்று  நடைபெறவுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவுக்கு தடைவிதிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தெரிவுக்கு இடைக்காலத் தடைவிதிக்குமாறு கோரி தேசியச் செயலாளரும் மத்திய குழுவின் நான்கு உறுப்பினர்களும் முன்வைத்திருந்த மனுவை கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன் விதான நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

இன்று (24.06.2023) நடைபெறவுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தெரிவுக்கு இடைக்காலத் தடைவிதிக்குமாறு நடாத்துமாறு கோரி, அதன் தேசிய செயலாளர் நிமல் குமார மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் நால்வரினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறவுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் 2022 வருடத்துக்கான பொதுக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தெரிவை கொழும்பு வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடத்துவது செஞ்சிலுவைச் சங்கத்தின் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் செஞ்சிலுவைச் சங்க அலுவலகத் தேர்தலை நடத்துவது தொடர்பில் செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் சரத் குமார என்பவருக்கும் இடையே கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள சமரசம் சட்டவிரோதமானது.

எனவே பொதுச் சபைக் கூட்டத்தையும் நிர்வாகிகள் தெரிவையும் நிறுத்த உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் நீதிமன்றத்தினால் இணக்கம் காணப்பட்ட விடயத்தில் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என சுட்டிக்காட்டிய மாவட்ட நீதிபதி மனுதாரர்களின் கோரிக்கையை விசாரணைக்கு ஏற்காமல் நிராகரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!