சென்னையில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பேரணி!

தமிழ்நாடு வானவில் கூட்டணி சார்பில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் பேரணி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும். அந்தவகையில், 15-வது ஆண்டு வானவில் விழா பேரணி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முதல் லாங்ஸ் கார்டன் சாலை வரை நேற்று நடைபெற்றது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் திருநங்கைகள், திருநம்பிகள் இப்பேரணியில் கலந்து கொண்டனர். அப்போது, மேளதாளங்கள் முழங்க ஆடல், பாடலுடன் 7 வர்ண கொடியை கைகளில் பிடித்தும், கோரிக்கை பதாகைகளை ஏந்தியும் பேரணி சென்றனர்.
    
மேலும், வர்ணங்களை முகத்தில் பூசியும், விதவிதமாக தங்களுக்கு பிடித்த ஆடைகளை அணிந்தும் பேரணியில் கலந்து கொண்டனர். அப்போது, ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திக்கொண்டனர். அப்போது சகோதரன் அமைப்பு பொதுமேலாளர் ஜெயா நிருபர்களிடம் கூறியதாவது:- நலவாரியம் கடந்த 2009-ம் ஆண்டு இந்த பேரணியை ஆரம்பித்தோம். இதோடு 15 ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் பங்களிப்பு குறைவாக இருந்தது.

ஆனால், இப்போது ஏராளமானோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கான உரிமையை தாங்கள்தான் போராடி பெற முடியும். இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பேரணி தங்களுக்கு பெருமிதம் கொண்ட பேரணி. திருநங்கைகளுக்கும், திருநம்பிகளுக்கும் தனி இடஒதுக்கீடு வேண்டும். தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் என்று உள்ளதை திருநங்கைகள், திருநம்பிகள் நலவாரியம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அடையாள அட்டை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் எல்.ஜி.பி.டி.க்கான வரைவை முன்னெடுத்துள்ளார்கள்.

இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தமிழ்நாடு அரசு எங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதேபோல, திருநங்கைகளுக்கான கிளினிக் ஒரு நாள் மட்டும் இயங்குகிறது. இதை வாரத்தின் 4 நாட்கள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் இதுகுறித்த புரிதல் வரவேண்டும். மாணவர்களுக்கு எல்.ஜி.பி.டி. குறித்து புரிதலை ஏற்படுத்த வேண்டும். சென்னையில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு அடையாள அட்டை விரைவாக கிடைக்கிறது.

ஆனால், மற்ற மாவட்டங்களில் அடையாள அட்டை கிடைப்பது சிரமமாக இருக்கிறது. எனவே, மாவட்டங்களில் உள்ள சமூக நலத்துறை அடையாள அட்டையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். பலூன் வெடித்ததால் பரபரப்பு தன்பாலின ஈர்ப்பாளர்களின் பேரணி தொடங்குவதற்கு முன்பாக ஹீலியம் பலூன்களை கைகளில் வைத்து பேரணியில் வந்தவர்கள் ஆடி பாடி மகிழ்ந்தார்கள்.

அப்போது, எதிர்பாராத விதமாக ஒரு ஹீலியம் பலூன் வெடித்து சிதறியது. அப்போது, அருகில் இருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடினார்கள். இதில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால், சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!