இலங்கை அரசாங்கம் எடுத்த இரகசிய திட்டம் அம்பலம்

பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட கடனை மீளச் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியைப் பங்களாதேஷிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சிடம் இருந்து இந்த இரகசிய தகவல் வெளிவந்துள்ளதாக மேற்படி ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் கோட்டாபய ராஜபக்ச அரசின் கீழ் விற்பனைக்கு தயாராக இருந்த போது, அதற்கு எதிராக பெரும் எதிர்ப்பு ஏற்பட்டவுடன் அந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டது.

250 மில்லியன் டொலர் கடன்

எனவே, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கொழும்பு துறைமுகத்தில் குறிப்பிட்ட பிரதேசத்தை பங்களாதேஷிற்கு வழங்க துறைமுகங்கள் விவகார அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SWAT கடன் திட்டத்தின் கீழ் பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 250 மில்லியன் டொலர் கடனை மீளச் செலுத்துவது தொடர்ந்தும் பிற்போடப்பட்ட நிலையிலேயே இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாக குறித்த ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க கோட்டாபய அரசு இணங்கியுள்ளதாக பல்வேறு எதிர்ப்புக்களும் ஆர்ப்பாட்டங்களும் நாட்டில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் உள்நுழைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுக ஊழியர்களும், பௌத்த மகா சங்க பிரதிநிதிகளும் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

கோட்டாபய அரசாங்கம்

எனினும் இந்த திட்டம் தொடர்பாக கோட்டாபய அரசாங்கத்தால் 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது என்று துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், 51சதவீத உரிமை இலங்கை அரசாங்கத்திற்கும், மீதமுள்ள 49சதவீத உரிமை இந்தியாவின் “அதானி“ நிறுவனத்திற்கும் ஏனைய தரப்பினருக்கும் பங்குதாரர்களாக இருக்கக் கூடிய வகையில் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு விற்க நல்லாட்சி அரசாங்கம் ஒப்பந்தம் செய்ந்திருந்ததாகவும், விற்பனைக்கு பின்னர் ஜப்பானில் இருந்து கடன் பெறுவது மற்றும் கடன் தொகையை கொண்டு நிர்மாணப் பணிகளுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்வது என்பன உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறே இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் உள்ள பின்னடைவுகள் காரணமாக நாட்டின் வளங்களை கடன் வழங்குநர்களுக்கு தாரைவார்க்கும் செயற்பாடு காணப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகம்

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினுடைய காலத்தில் 29.07. 2017 அன்று ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தை சீன நிறுவனமான சைனா மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

அதன் அடிப்படையில், தனியார் மற்றும் அரச பங்குடமையின் கீழ் இலங்கையும், மேற்படி சீன நிறுவனமும், ஹம்பாந்தோட்டை துறைமுக நடவடிக்கையை முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெறும் எனவும் முழுத் தொகையையும் கடனைச் செலுத்தவே பயன்படுத்துவோம் எனவும் முன்னாள் பிரதமரும் தற்போதைய நாட்டின் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க உறுதியளித்திருந்தார்.

எனினும் சீனாவினுடைய கடன் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வித முனேற்றத்தையும் பெறவில்லை என்பது வெளிப்படுகிறது. அத்துடன் தற்போதைய அரசாங்கம் பங்களாதேஷிடம் பெற்ற கடன் தொடர்பில் எழுந்த சர்ச்சையானது இலங்கை பொருளாதாரத்தின் பின்னடைவை எடுத்துக்காட்டும் ஒரு விடயமாக மாறியுள்ளது.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!