கூட்டமைப்பு பெயரை பயன்படுத்த முடியாது! – ஐந்து கட்சி கூட்டணிக்கு ஆப்பு.

ஆர்.ராகவனை செயலாளராக்கொண்டு பதிவு செய்யப்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெயரில் உள்ள ஜனநாயகத்தை நீக்கி தமிழ்த் தேசியக் கூட்டணி என மட்டும் செயல்படவும் அதனை ஆங்கிலத்தில் ரி.என்.ஏ என உச்சரிக்கவும் தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு எழுத்தில் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் இவ்விடயம் தேர்தல்கள் ஆணைக் குழுவின் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
    
அந்த வகையில் இதே பெயரில் வேறு கட்சி நீண்ட காலமாக இயங்குவதனால் இந்த சொல்லாடல் இடம்பெறும் வகையிலான பெயரிற்கு அனுமதிக்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்து எழுத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ரி.என்.ஏ ஆரம்பிக்கும்போது இருந்த 5 கட்சிகளில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் இரு கட்சிகளும் இந்த கூட்டணியில் இருப்பதனால் அந்தப் பெயர் தமக்கே சொந்தம் என கூறிவந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டது.

இதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என அனைவரும் இணங்கி, தமிழ் அரசுக் கட்சியின் பெயரில் பயன்படுத்தவே ஒப்புதல் வழங்கியதனால் அந்தக் கட்சியின் சின்னத்திற்கே இப் பெயரை பயன்படுத்த முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு பதிலளித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழ் அரசுக் கட்சி வெளியேறி விட்டதாக ரெலோவும், புளொட்டும் அறிவித்து தம்முடன் ஈ.பி.ஆர்எல்.எவ், தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றையும் இணைத்துக்கொண்டு தாமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என கூறினர்.

இதற்கமைய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!