பிரித்தானிய வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு நெருக்கடி!

பிரித்தானியாவில் தண்ணீர் விநியோக நிறுவனங்கள் குடியிருப்புகளுக்கான கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடனில் தவிக்கும் Thames Water நிறுவனம் திவாலானால் வாடிக்கையாளர்கள் அந்த இழப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரித்தானியாவின் மிகப்பெரிய தண்ணீர் விநியோக நிறுவனமான Thames Water, எதிர்கால நலன் கருதி புதிய முதலீடுகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது.
    
மட்டுமின்றி, குறித்த நிறுவனமானது 14 பில்லியன் பவுண்டுகள் கடனாளியாகவும் உள்ளது. ஆனால் நிறுவனத்திடம் தற்போது 4.2 பில்லியன் பவுண்டுகள் நிதி இருப்பதாகவும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் மேலதிக நிதி திரட்டும் திட்டத்தை முன்னெடுக்க இருப்பதாகவும் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியின் நடுவே, Thames Water நிறுவனத்திற்கு 3.3 மில்லியன் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது. 2017ல் கேட்விக் விமான நிலையத்திற்கு அருகே மில்லியன் கணக்கான லிட்டர் கழிவுநீர் ஆறுகளில் கொட்டப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த அபராதம் செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டது.

வாடிக்கையாளர்களுக்கு 40 சதவீதம் வரையில் கட்டண உயர்வை அமுலுக்கு கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியான சில வாரங்களில் 3.3 மில்லியன் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!