பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தகுதியானவரை கண்டுபிடிக்க முடியவில்லை!

நாட்டின் ஒழுக்கம் மிகவும் சீர்குலைந்துள்ளதால், பொலிஸ் மா அதிபர் ஓய்வு பெற்றதன் பின்னர், குற்றச்சாட்டுக்கள் அற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
    
இதன் காரணமாகவே தற்போதைய பொலிஸ் மா அதிபரின் பதவியை மூன்று மாதங்களுக்கு நீடிக்க வேண்டிய நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், உட்பட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் வரிசையில் இருப்பதாகவும், அவர்களில் மூப்புக்கு ஏற்ப, ஒன்று முதல் நான்கு வரையிலான வழக்குகள் பல்வேறு குற்றவியல் நீதிமன்றங்களில் இருப்பதாகவும், ஐந்தாவது முதல் எட்டாவது வரை இருப்பவர்கள் மட்டுமே எவ்விதமான குற்றச்சாட்டுகளும் இன்றி இருக்கின்றனர் என்றும் ரங்கே பண்டார கூறினார்.

நாட்டில் சட்டத்தையும் ஒழுக்கத்தையும் அமுல்படுத்த வேண்டிய அணிக்கே இந்த நிலை என்றால் நாட்டின் ஏனைய பகுதிகளில் சட்டம் ஒழுக்கம் பற்றி பேசுவதில் அர்த்தமில்லையா என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!