டெல்லியில் கனமழை: யமுனாவில் வரலாறு காணாத வெள்ளம்!

வடஇந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. டெல்லியில் கனமழையினால் கடந்த மூன்று நாட்களாக யமுனையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. யமுனை நதியில் 208.48 மீட்டர் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியே வர முடியாத நிலை நீடிக்கிறது. இந்நிலையில் வெள்ள நீரில் மூழ்கிய பகுதிகளில் உள்ள பள்ளிகளை தற்காலிகமாக மூடுவதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்தார். முன்னதாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும், சாலை மற்றும் ரெயில் போக்குவரத்துக்காக பழைய ரெயில்வே பாலம் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளது. இருப்பினும் யமுனை ஆற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நீர்மட்டம் 208.46 மீட்டரை தாண்டியுள்ளது. காலை ஆறு மணிக்கு 208.41 மீட்டராக இருந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்குள் மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் 203.14 மீட்டரில் இருந்து திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் 205.4 மீட்டராக நீர்மட்டம் உயர்ந்தது. புதன் கிழமை மதியம் 1 மணிக்கு 207.49 மீட்டராகவும், இரவு 10 மணிக்கு 208 மீட்டராகவும் இருந்த முந்தைய சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

யமுனை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வசிராபாத், சந்திரவால், ஓக்லா ஆகிய இடங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக சில பகுதிகளில் தண்ணீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும். யமுனை நீர்மட்டம் குறைந்தவுடன் இந்த ஆலைகள் வழக்கம்போல் செயல்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் இல்லத்திற்கு அருகே வெள்ளநீர் டெல்லியின் தாழ்வான பகுதிக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சிவில் லைன் ஏரியாவில் ரிங் சாலை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இந்த இடம் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவிலேயே உள்ளது.

அதேபோல் இது டெல்லி மாநில சட்டமன்றம் இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ளது. மழை நின்ற பின்னரும் நீர் வடிந்தபாடில்லை. யமுனை ஆறு உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி மாநிலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளை உள்ளிடக்கியதாகும். அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அரியானாவில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து அபாய கட்டத்தை தாண்டியுள்ளது. டெல்லி மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து நீர் திறந்து விடப்படுவதை தடுக்குமாறு மத்திய அரசிடம் வேண்டுகொள் விடுத்துள்ளார். பாதிப்புகள் டெல்லி மாநிலம் கனமழையால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இடுப்பு அளவு நீரில் மக்கள் நடந்து செல்கின்றனர்.

மின்சாரம் மற்றும் இணையதள சேவை முடங்கி உள்ளது. குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் புகுந்த இடங்களில் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!