தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள்: ரணிலிடம் கொந்தளித்த சம்பந்தன்

“எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள்” என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (18.07.2023) மாலை நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரப் பகிர்வு குறித்து பேசவில்லை என கூறப்படுகின்றது.

மாறாகத் தாம் தயார்ப்படுத்திக் கொண்டுவந்த மனித உரிமைகள் சார் விடயம், காணாமல்போனோர் பணிமனை, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாகவே விளக்கமளித்துள்ளார். அதிகாரப் பகிர்வு தொடர்பில் பேசப்படாத நிலையில், சினமுற்ற இரா. சம்பந்தன் எம்.பி., “எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள். அதிகாரப் பகிர்வு குறித்து முதலில் எங்களுடன் பேசுங்கள்…” என்று தெரிவித்துள்ளார்.

இதன் பின்னரே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் குறித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!