தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த 63 மருந்துகள்: இலங்கை சுகாதார அமைச்சு தகவல்

2023 ஆம் ஆண்டில் மொத்தம், 63 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக இலங்கையின் சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க நேற்று(20.07.2023) அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பரிசோதனையின் போது அடையாளம் காணப்பட்ட மருந்துகளில் சில திரும்பப் பெறப்பட்டுள்ளதுடன் சில மருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், சில தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊடகங்கள் இந்த விவகாரத்தை பெரிதாக்கியுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 585 தரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதுடன் அதிக எண்ணிக்கையிலான குறைப்பாடுகள், 2019 இல் பதிவாகியுள்ளன. அதேநேரம் 86 மருந்துகள் 2022 இல் தர சோதனையில் தோல்வியடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் 53 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவும், ஒரு சில மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகவும் மற்றவை பாகிஸ்தான் மற்றும் பங்காளதேசத்தில் இருந்து பெறப்பட்டவை என்றும் கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!