ரணிலுடன் சஜித் போட்டியிடமாட்டார்! – பந்தயம் கட்டுகிறார் அமைச்சர் ஹரின்

அடுத்த வருடம் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் சஜித் பிரேமதாச போட்டியிடப் போவதில்லை என்பதை பந்தயம் வைத்து தெரிவிக்கிறேன்என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
    
ஐக்கிய தேசிய கட்சி வத்தளை தொகுதி அரசியல் சபை கூட்டம் வத்தளை பிரதேசத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
எங்களை கட்சியில் இருந்து நீக்கியதாக எனது முன்னாள் தலைவர் சஜித் பிரேமதாச கடிதம் அனுப்பி இருந்தார். எம்மை விலக்கியதாக தெரிவித்த பின்னர் நாங்கள் எங்கு செல்லப்போகிறோம். அதனால் அது தொடர்பில் நாங்கள் அலட்டிக் கொள்ளப்போவதில்லை.

அத்துடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என்பதே எமது நிலைப்பாடு. அதனை அவர் பகிரங்கமாக தெரிவித்த பின்னர் புத்தியுள்ள மனிதர்கள் எடுக்கும் தீர்மானத்தை கண்டுகொள்ளலாம். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் சஜித் பிரேமதாச அந்த தேர்தலில் போட்டியிடமாட்டார் என்பதை நானும் மனுஷ நாணயக்காரவும் பந்தயம் வைத்து தெரிவிக்கிறோம்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமல் செய்ய வேண்டும். அதற்காக டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதாக தெரிவித்து, தேர்தலில் இருந்து திருட்டுத்தனமாக ஒதுங்கிக்கொள்வார். அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறுயாரும் இல்லை. ஏனெனில் நாடு வீழ்ச்சியடைந்து வங்குராேத்து அடைந்திருந்த நிலையில், நாட்டை பொறுப்பேற்று, கட்டியெழுப்ப யாரும் முன்வராத நிலையில் ரணில் விக்ரமசிங்க முன்வந்தார். அன்று ரணில் விக்ரமசிங்க முன்வராவிட்டால் எமது நிலை என்னவாகி இருக்கும் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து யாரையும் பிரித்து எடுக்க இன்னும் நான் முயற்சிக்கவில்லை. அந்த பணியில் இன்னும் இறங்கவில்லை. அதில் இருக்கும் அனைவரையும் என்னால் பிரித்தெடுக்க முடியும். நாடு வங்குராேத்து நிலையில் மூழ்கிக்கொண்டிருக்கையிலேயே நானும் மனுஷ நாணயக்காரவும் இந்த கப்பலில் ஏறினோம். எமது அரசியல் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்காமல், நாடு தொடர்பாக மாத்திரமே சிந்தித்து நாங்கள் இந்த தீர்மானத்தை எடுத்தோம் .

மேலும் அடுத்த வருடம் முதல்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என நாங்கள் நம்புகிறோம். அந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார். அவர் உயர்ந்த நிலையில் வெற்றிபெறுவது உறுதியாகும். அதனால் வெற்றிபெறும் அணியுடன் ஆரம்பத்திலேயே இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!