இந்தியாவின் மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா?

நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில் ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:- கடந்த 1-ந் தேதி நிலவரப்படி, இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றிய மக்கள்தொகை மதிப்பீட்டுக்கான தொழில்நுட்ப குழுவின் அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய மக்கள்தொகை ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதுபோல், கடந்த 1-ந் தேதி நிலவரப்படி, சீனாவின் மக்கள்தொகை 142 கோடியே 56 லட்சத்து 71 ஆயிரம் என்று ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. 2021-ம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் திட்டத்தை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அரசிதழில் வெளியிட்டோம். இருப்பினும், கொரோனா பரவல் காரணமாக, கணக்கெடுப்பு பணிகள் தள்ளி வைக்கப்பட்டன. சில அரசியல் கட்சிகள், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால், சுதந்திரத்துக்கு பிறகு எஸ்.சி., எஸ்.டி.யை தவிர, இதர சாதிகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது இல்லை என்று அவர் கூறினார். இன்னொரு கேள்விக்கு நித்யானந்த் ராய் கூறியதாவது:- சில அதிகாரபூர்வமற்ற, அங்கீகாரம் பெறாத இணையதளங்கள், போலியாக இந்திய இ-விசாவை வழங்க முயன்று வருவதாக அவ்வப்போது எங்களுக்கு புகார்கள் வருகின்றன. அந்த இணையதளங்கள், அதிகாரபூர்வ விசா இணையதளங்கள் போன்றே காட்சி அளிக்கின்றன.
அதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த இணையதளங்களை முடக்குமாறு ‘செர்ட்-இன்’ அமைப்பிடம் முறையிட்டுள்ளோம். கூகுள் நிறுவனத்திடமும் கூறியுள்ளோம். வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு நித்யானந்த் ராய் கூறியதாவது:- மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளால் காஷ்மீருக்குள் இந்த ஆண்டில் ஜூன் 30-ந் தேதிவரை ஒரு பயங்கரவாதி கூட ஊடுருவவில்லை. கடந்த ஆண்டு 14 பயங்கரவாதிகள் ஊடுருவினர் என்று அவர் கூறினார். ஆயுதப்படை ஆள்தேர்வு மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி நிசித் பிரமாணிக் ஒரு கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:- மத்திய ஆயுதப்படைகள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவுக்கு கடந்த 9 மாதங்களில் 36 ஆயிரத்து 521 பேர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர, அப்படைகளில் மேலும் 79 ஆயிரத்து 960 பேரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய்குமார் மிஸ்ரா கூறியதாவது:- பாகிஸ்தான், சீனா குடியுரிமை ெபற்றவர்கள் இந்தியாவில் விட்டுச்சென்ற அசையா சொத்துகள், ‘எதிரி சொத்துகள்’ என்று அழைக்கப்படுகின்றன. தற்போது, 12 ஆயிரத்து 611 எதிரி சொத்துகள் உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி. தமிழ்நாட்டில் மட்டும் 67 எதிரி சொத்துகள் உள்ளன. எதிரி சொத்துகளை ஒளிவுமறைவின்றி ஏலம் விடும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது என்று அவர் கூறினார்.

ஆயுஷ்மான் பாரத் மாநிலங்களவை கேள்வி நேரத்தில், மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி எஸ்.பி.சிங் பாகல் கூறியதாவது:- மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில், இதுவரை 5 கோடியே 39 லட்சம் ஆஸ்பத்திரி அனுமதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் ரூ.66 ஆயிரத்து 236 கோடி செலவிடப்பட்டது. இந்த திட்டத்தால், மக்களுக்கு பெருமளவு பணம் சேமிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!