இலங்கை மீது கனடா மேலாதிக்கம் செலுத்த முனைகிறது!

கனடாவின் அறிக்கைகள் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவுவதாக அமையாது. கனடா போன்ற நாடுகள் தமது மேலாதிக்க கொள்கைகளால் இலங்கை போன்ற நாடுகளின் உள்ளக விவகாரங்களில் செல்வாக்கு செலுத்துவதற்கு தமக்கு உரிமை காணப்படுவதாக எண்ணுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
    
ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமைஇடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எந்தவொரு நாட்டுக்கும் ஏதேனுமொரு விடயம் தொடர்பில் அறிக்கை விடுவதற்கான உரிமை காணப்படுகிறது. கறுப்பு ஜூலை என்பது இலங்கை வரலாற்றும் எந்தவொரு சந்தர்ப்பத்தில் பெருமையடையக் கூடிய விடயமல்ல. அது நாம் வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்.

எவ்வாறிருப்பினும் இதனை சில நாடுகள் அவற்றின் உள்ளக அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. கனடா இது தொடர்பில் மாத்திரமின்றி , பல விடயங்கள் தொடர்பில் இதற்கு முன்னரும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

கனடா போன்ற சில நாடுகள், தற்போதும் அவற்றின் மேலாதிக்கத்தை இலங்கை போன்ற நாடுகள் மீது செலுத்துவதற்கான உரிமை தமக்கு இருப்பதாகக் கருதுகின்றன. எனவே தான் அவ்வாறான எண்ணங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் கருத்துக்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு நிராகரித்து அறிக்கைகளை வெளியிடுகிறது.

அது தவிர பேச்சுவார்த்தைகள் மூலம் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் எமது நிலைப்பாட்டை தெளிவாகக் குறிப்பிடுகின்றோம். இவ்வாறான நாடுகள் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தேவை காணப்படுகிறது. காரணம் அவற்றால் வெளியிடப்படும் அறிக்கைகள் இலங்கையில் நல்லிணக்கத்துக்கு உதவும் காரணிகளாக அமையாது.

கனடா போன்ற நாடுகள் இவ்விடயத்தில் தலையிடுவதாயின், இலங்கையின் இனப்பிரச்சினை , நல்லிணக்கம் என்பவற்றுக்கு தீர்வினை வழங்க முற்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் கனடாவின் செயற்பாடுகள் அவ்வாறு எந்த இலக்கையும் கொண்டதாக இல்லை என்பது கவலைக்குரியதாகும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!