மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல்காந்தி!

கடந்த 2019-ம் ஆண்டு, கர்நாடக மாநிலம் கோலாரில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி பேசியது சர்ச்சை ஆனது. அவர் பிரதமர் மோடி, வைர வியாபாரி நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை விமர்சித்தார். ”திருடர்கள் எல்லாம் மோடி என்ற பெயரையே வைத்திருப்பது ஏன்?” என்று பேசினார். அவர் மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்தார். அதில், ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கடந்த மார்ச் 23-ந் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மறுநாள், அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
    
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு இதற்கிடையே, மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கடந்த 4-ந் தேதி நிறுத்தி வைத்தது. இந்த உத்தரவு, மக்களவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதிநீக்க உத்தரவை மக்களவை செயலகம் நேற்று திரும்ப பெற்றது. இதுதொடர்பாக மக்களவை செயலகம் வெளியிட்ட அறிவிப்பாணையில், ”சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கருத்தில்கொண்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8-வது பிரிவின்கீழ் பிறப்பிக்கப்பட்ட ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதிநீக்க உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் வெளியானவுடன், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. தொண்டர்கள், ஆட்டம், பாட்டத்தில் ஈடுபட்டனர். இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். நாடாளுமன்றத்துக்கு வந்தார் தகுதிநீக்க உத்தரவு திரும்ப பெறப்பட்ட நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு ராகுல்காந்தி மீண்டும் எம்.பி. ஆனார். அவர் பகல் 12 மணியளவில் நாடாளுமன்றத்துக்கு வந்தார். அவருக்கு காங்கிரஸ்மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள், முதலாம் எண் நுழைவாயிலில் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். வாழ்த்து கோஷங்கள் முழங்கினர்.

முதலில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், மக்களவை கூட்டத்தில் அவர் பங்கேற்றார். சசிதரூர் இதற்கிடையே, ராகுல்காந்தி மீண்டும் எம்.பி. ஆனதற்கு பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ”நீதிக்கும், நமது ஜனநாயகத்துக்கும் வெற்றி கிடைத்துள்ளது. ராகுல்காந்தி இனிமேல் மக்களுக்கும், தனது தொகுதிக்கும் சேவை செய்யலாம்” என்று கூறியுள்ளார்.

மாநிலங்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் பிரமோத் திவாரி கூறியதாவது:- உண்மை வெற்றி பெற்றுள்ளது. பொய் தோல்வி அடைந்துள்ளது. இந்தியா வெற்றி பெற்றுள்ளது. எங்கள் சிங்கம் வெற்றி பெற்றுள்ளது. மோடிஜி, உங்கள் தோல்வி தொடங்கிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார். அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறியிருப்பதாவது:-

ராகுல்காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்திருப்பது உண்மைக்கு கிடைத்த வெற்றி.
அவரது போராட்டமும், மக்களின் அபரிமிதமான ஆதரவும் பிடிவாத அரசை பணிய வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ”நீதித்துறை மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி. இதுபோல், மற்றவர்களின் தகுதிநீக்க உத்தரவும் திரும்ப பெறப்படும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!