பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை மாற்றி புதிய வார்த்தைகளை வெளியிட்ட உச்ச நீதிமன்றம்!

சமுதாயத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அதிகமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சில வார்த்தைகள் நீதிமன்றங்களின் நடைமுறையில் கூட பயன்பாட்டில் உள்ளது. அது போன்ற வார்த்தைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. அதன்படி, 40 வார்த்தைகளுக்கு பதில், புதிய வார்த்தைகள் அடங்கிய கையேடு புத்தகத்தை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் வெளியிட்டுள்ளார்.
    
அதனை வெளியிட்டுப் பேசிய சந்திரசூட், `கடந்த கால தீர்ப்புகளில் பெண்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட சில வார்த்தைகள் முறையற்றவை. கோர்ட்டு தீர்ப்பை விமர்சிக்கும் நோக்கத்தில் இந்த கையேடு வெளியிடப்படவில்லை. ஒரே மாதிரியான வார்த்தைகள் எவ்வாறு கவனக்குறைவாக கையாளப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டவே இந்தக் கையேடு வெளியிடப்படுகிறது’ என்று குறிப்பிட்டார்.

மேலும், `நீதிபதிகள் சட்டப்பூர்வமாக சரியான தீர்ப்புகளை வெளியிட்டாலும், அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் தனி நபர்களின் கண்ணியம், நற்பண்புகள், சுயத்தை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்து விடுகிறது’ என்றும் குறிப்பிட்டார். புதிய கையேட்டின்படி பெண்களைக் குறிப்பிடும் வார்த்தைகள் சிலவற்றிற்கு வேறு வார்த்தைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி ‘தவறிழைத்த பெண்’, ‘முறை தவறிய பெண்’களை பொதுவான வார்த்தையாக பெண் என்றே குறிப்பிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

`விபச்சாரி’ என்ற வார்த்தைக்கு பதிலாக பாலியல் தொழிலாளி என்றும், `கள்ள உறவில் ஈடுபட்ட பெண்’ என்பதை `திருமணத்திற்கு வெளியே உடலுறவில் ஈடுபட்ட பெண்’ என்றும், `தகாத உறவு’ என்பதை திருமணத்தை மீறிய உறவு என்றும் அழைக்க வேண்டும். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகளை கடத்தப்பட்ட குழந்தை என்றும், வல்லுறவை ‘பலாத்காரம்’ என்றும் குறிப்பிடவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

`ஈவ் டீசிங்’ என்பதை தெரு பாலியல் துன்புறுத்தல் என்றும், `ஹவுஸ்வொயிப்’ என்பதை `ஹோம் மேக்கர்’ என்றும், ‘முதிர்கன்னி’ என்பதை `திருமணமாகாதவர்’ என்றும், `சோம்பேறி’ என்பதை வேலை இல்லாதவர் என்றும், திருமணமாகாமல் தாயானவரை தாய் என்றே அழைக்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!