பிழைப்புக்காக தஜிகிஸ்தானில் இளம்பெண்கள் எடுக்கும் முடிவு!

தஜிகிஸ்தான் நாட்டில், பிழைப்புக்காக பல இளம்பெண்கள், இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியாக வாழக்கூட சம்மதிக்கும் ஒரு நிலைமை காணப்படுகிறது. அராசங்கமும், அதைக் கண்டும் காணாததுபோல விட்டு விடுகிறதாம்.
    
தஜிகிஸ்தான் நாட்டில், சமீப காலமாக பலதார மணம் அதிகரித்துவருகிறது. பல பெண்கள், இரண்டாவது மனைவியாகவோ, மூன்றாவது மனைவியாகவோ கூட வாழ்க்கைப்பட சம்மதிக்கிறார்கள்.

அதற்கு முக்கிய காரணம் பொருளாதாரச் சூழல். மேலும், படிக்காத பல பெண்கள், பிழைப்புக்காக இரண்டாவது, மூன்றாவது, ஏன் நான்காவது மனைவியாக வாழக்கூட சம்மதிக்கிறார்கள்.
திருமணமாகாத அல்லது விவாகரத்தான பெண்களை சமுதாயமும் எதிர்மறையாகப் பார்ப்பதால் இப்படிப்பட்ட திருமணங்களுக்கு பல பெண்கள் சம்மதிக்கிறார்கள்.

அமீனா என்னும் பெண்ணின் சம்மதத்தைக் கூட கேட்காமல் படிக்கும்போதே அவருக்கு திருமணம் செய்துவைத்தார்கள் அவருடைய பெற்றோர். அவரது கணவர் வேலைக்காக ரஷ்யா சென்றார். ஆரம்பத்தில் ஆண்டுக்கொருமுறை வீட்டுக்கு வந்த கணவர் பிறகு வரவேயில்லையாம். அவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாக அமீனாவுக்கு பிறகு தகவல் கிடைத்துள்ளது.

தனிமையில் விடப்பட்ட அமீனா, இரண்டாவதாக ஒருவருக்கு வாழ்க்கைப்பட சம்மதித்துள்ளார். அவரது இரண்டாவது கணவரோ, அவருக்கு ஒரு வீடு, ஒரு கார் வாங்கிக்கொடுத்துள்ளதுடன், சொந்தமாக ஒரு அழகு நிலையம் துவங்கவும் உதவியுள்ளாராம். முதல் திருமணம் தனக்குத் தராத மகிழ்ச்சியை, இரண்டாவது திருமணம் தந்துள்ளதாக தெரிவிக்கிறார் அமீனா.

இப்படி இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியாக வாழ்க்கைப்படுவதில் சிக்கல்களும் இல்லாமல் இல்லை. முதல் திருமணம் தவிர்த்த மற்ற திருமணங்கள் பதிவு செய்யப்படுவதில்லை என்பதால், கணவன் தன்னை விட்டு விட்டுப் போய்விட்டாலோ, இறந்துபோனாலோ, இந்த பெண்களுக்கு சட்டப்படி பாதுகாப்போ, சொத்தில் உரிமையோ கிடைக்காது.

முதல் மனைவிகள் தங்கள் கணவன் இரண்டாவது திருமணம் செய்வதை எதிர்மறையாகத்தான் பார்க்கிறார்கள் என்றாலும், அவர்களும் பொருளாதாரச் சூழல் காரணமாக அதை எதிர்க்கமுடியாத நிலையில்தான் காணப்படுகிறார்கள்.

இப்படி இரண்டாவது, மூன்றாவது திருமணங்கள் செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், அது பெண்களின் வாழ்வைத்தான், குறிப்பாக பொருளாதாரச் சூழலைத்தான் பாதிக்கிறது என்பதால், அரசாங்கமும் அதைக் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறதாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!