நிலவில் ‘லேண்டர்’ தரையிறங்குவது நேரடி ஒளிபரப்பு: இஸ்ரோ அறிவிப்பு!

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் ரஷியாவின் ‘லூனா-25’ திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது. ‘லூனா-25’ விண்கலம் நிலவில் மோதி நொறுங்கிவிட்டது. இதனால் இந்தியாவின் ‘சந்திரயான்-3’ விண்கலத்துக்கு முன்பாக நிலவில் தரையிறங்கும் ரஷியாவின் முயற்சி நிறைவேறவில்லை. ரஷியா தவறவிட்டதை ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் மூலம் சாதித்துக் காட்ட இஸ்ரோ தயாராகி வருகிறது.
    
இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) மாலை 5.27 மணிக்கு நிலவில் இறங்கும், ‘சந்திரயான்-3’-ல் இருந்து பிரிந்து சென்ற ‘விக்ரம் லேண்டர்’ நிலை மற்றும் தயார்நிலை குறித்து மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்கிடம் இஸ்ரோ தலைவர் சோமநாத் விளக்கம் அளித்தார். அடுத்த 2 நாட்களுக்கு ‘சந்திரயான்-3’-ன் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார். நிலவு வட்டப்பாதையில் சுற்றிவரும் ரோவர், லேண்டரின் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

லேண்டர், அபாயத்தைக் கண்டறிதல் மற்றும் தவிர்ப்பு கேமரா மூலம் நிலவின் தென்துருவத்தில் எடுத்த புகைப்படங்களை தொடர்ந்து அனுப்பி வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறினர். ‘வருக, நண்பா!’ மேலும் ‘விக்ரம் லேண்டர்’, ‘சந்திரயான்-2’ விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட ‘ஆர்பிட்டர்’ உடன் இருவழி தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. லேண்டரை வரவேற்கும் விதமாக அதற்கு, ‘வருக, நண்பா!’ என்ற செய்தியை ஆர்பிட்டர் அனுப்பியுள்ளது.

ஆர்பிட்டர் உடன் மட்டுமல்லாது, பெங்களூரு அருகே பயலாலுவில் உள்ள இஸ்ரோவின் இந்திய ஆழ் விண்வெளி நெட்ஒர்க் அமைப்புடனும், ரோவருடனும் தொடர்பு கொள்ளும் திறனை ‘விக்ரம் லேண்டர்’ கொண்டிருக்கிறது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று தெரிவித்தனர். நேரலையில் நிலவு காட்சிகள் ‘சந்திரயான்-3’-ன் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்குவது தொடர்பாக இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்வகையில், லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காணலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. அதாவது நாளை (புதன்கிழமை) மாலை 5.27 மணி முதல் நேரலை ஒளிபரப்பு தொடங்கிவிடும். இஸ்ரோ இணையதளம் (https://www.isro.gov.in/), யூடியூப், இஸ்ரோவின் முகநூல் பக்கம் (https://www.facebook.com/ISRO/) மற்றும் டிடி நேசனல் டிவி. சேனல் உள்ளிட்டவற்றில் இது நேரலையாக ஒளிபரப்பப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!