இந்தியத் தூதுவர் பாக்லே கொழும்பில் இருந்து இடமாற்றம்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிவரும் கோபால் பாக்லே இடமாற்றம் செய்யப்படவுள்ளார். கோபால் பாக்லேயின் இடத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதராக உள்ள சந்தோஷ் ஜா நியமிக்கப்படவுள்ளதாகவும் கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவிற்கான இந்திய தூதுவராக நியமிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான கோபால் பாக்லே, கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிவருகின்றார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக பணியாற்றும் கோபால் பாக்லே, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களில் ஈடுபாட்டுடன் செயற்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மிக நெருக்கமான இருதரப்பு உறவை கொண்டுள்ள அவுஸ்திரேலியாவிற்கான தூதுவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள கோபால் பாக்லே, எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் அந்தப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளார். கோபால் பாக்லேயின் பதவிக்கு இந்திய – ஐரோப்பிய ஒன்றிய சுயாதீன வர்த்தக உடன்படிக்கையில் முக்கிய பங்காற்றிய சந்தோஷ் ஜா, நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா விடயத்தில் சீனாவும் இந்தியாவும் தமது செல்வாக்கை செலுத்துவதற்கு முயற்சிக்கும் முக்கியமான தருணத்தில் சந்தோஷ் ஜா, உயர்ஸ்தானிகர் பொறுப்பிற்கு நியமிக்கப்படவுள்ளார்.
சீனாவின் மற்றுமொரு நட்பு நாடான பாகிஸ்தானைப் போன்று பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் சிறிலங்கா, சீனாவுக்கு எதிரான இந்தியாவின் மூலோபாய கரிசனைகளுக்கு இன்னும் சாதகமாக பதிலளிக்க வேண்டிய சூழல் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டையின் ஆழ்கடல் துறைமுகங்களில் சீன கண்காணிப்பு கப்பல்கள் மற்றும் பெலஸ்ரிக் ஏவுகணை கண்காணிப்பு கப்பல்களை அனுமதிப்பது தொடர்பான விடயங்கள் பேசுபொருளாகியுள்ள பின்னணியில் இந்தப் பதவி மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!