அமெரிக்கா நிதியுதவி வழங்காதது ஏன்?

இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்கும் பட்சத்தில், அந்த நிதியை சீனாவின் கடன்களை மீளச்செலுத்துவதற்கே பயன்படுத்த வேண்டியிருக்கும் என்றும் அதனை அமெரிக்க மக்கள் விரும்பமாட்டார்கள் என்றும் அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலென், தெரிவித்துள்ளார்.
    
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலெனுக்கும் தலைநகர் கொழும்பைத் தளமாகக்கொண்டியங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று செவ்வாய்கிழமை காலை 11.30 மணியளவில் கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கின் பங்கேற்புடன் நடைபெற்ற இச்சந்திப்பில் சிவில் சமூகத்தின் சார்பில் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, கலாநிதி ஜெஹான் பெரேரா, சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், சட்டத்தரணி கௌதமன், த்யாகி ருவன்பத்திரண ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்க உயர்மட்டத் தலைவர்களுடனான சந்திப்பின்போது எவ்விடயங்கள் தொடர்பில் வலியுறுத்தவேண்டும் என செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலென் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் அபிப்பிராயம் கோரினார்.

அதற்குப் பதிலளித்த பிரதிநிதிகள், தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படவேண்டும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படக்கூடாது, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான ஜனநாயக உரிமைக்கு மதிப்பளிக்கப்படவேண்டும், வட-கிழக்கு மாகாணங்களில் தொடரும் இராணுவமயமாக்கல் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பன உள்ளடங்கலாக அரசாங்கத்திடம் வலியுறுத்தப்படவேண்டிய முக்கிய விடயங்கள் பற்றி எடுத்துரைத்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட சிவில் சமூகப்பிரதிநிதி ஒருவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கே விரும்புவார் என்றும், எனவே அதற்கு எதிராக முன்னெடுக்கப்படக்கூடிய ஆர்ப்பாட்டங்களைத் தொடக்கத்திலேயே தடுத்துநிறுத்துவதுடன் தேர்தல்களையும் உரிய காலத்தில் நடத்தமாட்டார் என்றும் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்த அமுலாக்கம் உள்ளிட்ட சில விடயங்கள் குறித்துப் பேசினாலும், அவற்றை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் சிங்களமக்களின் வாக்குகளை இழக்கநேரிடும் என்பதால் அவற்றில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் எவையும் எட்டப்படாது என்றும் சுட்டிக்காட்டினார். இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விடயங்கள் தொடர்பில் ‘தேசிய கொள்கை’ ஒன்றை உருவாக்குவது தொடர்பில் அனைத்துக் கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையொடலொன்று முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்துமாறு சிவில் சமூகப்பிரதிநிதிகள் அமெரிக்க செனெட் சபை உறுப்பினரிடம் கேட்டுக்கொண்டனர்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் தொடர்பான சில நேர்மறையான விடயங்களை கிறிஸ் வான் ஹொலெனிடம் எடுத்துரைத்த சிவில் சமூகப்பிரதிநிதிகள் சிலர், எனவே அவர் ஜனாதிபதியாகப் பதவிவகிப்பது சிறுபான்மையினத் தமிழ்மக்களுக்கு ஓரளவு நன்மை பயக்கக்கூடியதாக அமையும் என்று குறிப்பிட்டனர். இருப்பினும் அதனை மறுத்த சிலர், கடந்தகாலங்களில் தமிழ்மக்கள் சார்ந்த விடயங்களில் ரணில் விக்ரமசிங்கவினால் மீறப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பில் சுட்டிக்காட்டியதுடன் எனவே அவரால் சிறுபான்மையின மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படாது என்றும் தெரிவித்தனர். இது இவ்வாறிருக்க சந்திப்பு நிறைவடைந்ததன் பின்னர், எமது நாட்டின் பொருளாதார மீட்சிக்கு அவசியமான நிதியுதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா முன்வரவேண்டுமென சிவில் சமூகப்பிரதிநிதியொருவர் கிறிஸ் வான் ஹொலெனிடம் கேட்டுக்கொண்டார்.

அதற்குப் பதிலளித்த அவர், ‘பாரிஸ் கிளப், இந்தியா உள்ளிட்ட கடன்வழங்குனர் நாடுகள் இலங்கைக்கு கடன் தள்ளுபடி மற்றும் கால அவகாசம் போன்றவற்றை வழங்குவதற்கு உடன்பட்டிருக்கின்ற போதிலும், சீனா அதற்கு இணங்கவில்லை. இதுவே இங்கு பிரச்சினைக்குரிய விடயமாக இருக்கின்றது. எனவே அமெரிக்கா நிதியுதவி வழங்கும் பட்சத்தில், அந்த நிதியை சீனாவின் கடன்களை மீளச்செலுத்துவதற்கே பயன்படுத்தவேண்டியிருக்கும். அதனை அமெரிக்க மக்கள் விரும்பமாட்டார்கள்’ என்று சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!