குருந்தி விகாரை விவகாரம் – அஸ்கிரிய பீடத்துக்கு ஜனாதிபதி அளித்துள்ள உறுதிமொழி!

நெருக்கடிக்கு முகம்கொடுத்த இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்னெடுக்கும் முயற்சிகள் தெடர்பில் சிலருக்கு புரிதல் இல்லாமல் இருப்பது கவலைக்குரியதாகும் என்றும், நாட்டிற்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்திற்கு மகா சங்கத்தினரின் ஆசிர்வாதம் உறுதியாக கிட்டும் என்றும் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஆனமடுவே தம்மதிஸ்ஸி தேரர் தெரிவித்தார்.
    
கண்டிக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க வண. வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரைச் சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். வரலாற்று சிறப்புமிக்க முதியங்கனை ரஜமகா விகாரையின் பொறுப்பாளர் கலாநிதி வண. முருந்தெனியே ஸ்ரீ தம்மரத்தன நாயக்க தேரரும் மேற்படி சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தார்.
அதனையடுத்து ஜனாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர்களான, வண. ஆணமடுவே தம்மதிஸ்ஸி தேரர் மற்றும் வண. வெடருவே உபாலி தேரர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க ஆணமடுவே தம்மதிஸ்ஸி தேரரை சந்தித்த போது, விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டம் உள்ளிட்ட நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அராசாங்கம் முன்னெடுத்துவரும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் எடுத்துரைத்தார்.

அங்கு கருத்துத் தெரிவித்த ஆணமடுவே தம்மதிஸ்ஸி தேரர், “கடந்த காலத்தில் நாடு பெரும் பொருளாதார சரிவைக் கண்டது. நெருக்கடியான காலத்தில் நாட்டை மீட்பதற்கான உங்களுடைய முயற்சிகள் உன்னதமானவை. அதனால் உங்களுடைய தனிப்பட்ட சொத்துக்களையும் இழக்க நேரிட்டது. தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் இயலுமை உங்களுக்கு உள்ளது. அதற்காக உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதமும் பாதுகாப்பும் கிட்ட வேண்டும்.

அதேபோல் குருந்தி விகாரையை அண்டிய பிரதேச மக்கள் இதுவரையில் ஒற்றுமையாக செயற்பட்டனர். இருப்பினும் அண்மையில் குழுவொன்று அங்கு நுழைந்து குழப்ப நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது. அதுபற்றிய விடயங்களைக் கண்டறிய வேண்டும்.” எனக் கேட்டுக்கொண்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ” அதேபோல் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே நான் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றேன். பௌத்த மத தலங்கள் அனைத்தையும் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்புகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். வடக்கில் குருந்தி விகாரையின் பிரச்சினையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

வெளிப்பிரதேசங்களிலிருந்து எவரையும் அழைத்துவர வேண்டாம் என, அப்பகுதி சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அப்பகுதி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்துள்ள நிலையில் வெளியிலிருந்து வந்த குழுவினரே முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளனர். அது தொடர்பில் வவுனியா மகாநாயக்க தேரரையும் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அதனால் நாம் வெளியிலிருந்து அந்த பிரதேசத்திற்கு செல்வதற்கு எவரையும் அனுமதிப்பதில்லை. அது தொடர்பிலான விடயங்களை கண்டறியுமாறு தொல்பொருளிலியல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் சட்டத்திற்கு அமைய செயற்படுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் மகா விகாரையில் அகழ்வுகளை மேற்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளோம். வடக்கில் இடம்பெறும் அகழ்வுகளின் அறிக்கைகளை பெற்றுக்கொண்டு அந்தப் பணிகளை முன்னெடுப்போம்.
முன்னைய அரசாங்கம் இராணுவத்தின் உதவியுடன் அகழ்வுகளை துரிப்படுத்தியதாக கூறினீர்கள். இருப்பினும் அந்த ஆய்வு முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை.

தொல்பொருள் திணைக்களம் வழங்கும் தீர்மானத்திற்கு அமைய செயற்பாடுகளை முன்னெடுக்க நாம் எதிர்பார்த்துள்ளோம். அந்தப் பகுதிகளை பாதுகாக்கவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.
பௌத்த தலங்களை பாதுகாக்கும் அதேநேரம் முதலில் தொல்பொருளிலியல் ஆய்வுகளை மேற்கொண்டு அப்பகுதிகளில் மற்றைய மதம் சார்ந்த பிரச்சினைகள் இருக்குமாயின் அதுபற்றி ஆராயவும் தயாராகவுள்ளோம்.

இருப்பினும் வெளியிலிருந்து வருவோர் அப்பகுதிகளுக்குள் பிரச்சினைகளை தோற்றுவிக்க நாம் இடமளியோம். அதற்காக மாகாண மதத் தலைவர்கள் குழுவொன்றை நியமித்து பிரச்சினைகளை நிவர்த்திக்கவும் எதிர்பார்த்துள்ளோம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் பிரச்சினைகள் ஏற்படாது. அதேபோல் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்திற்கமைவான சட்டமூலமொன்று 20 வருடங்களின் முன்னர் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அதன் உள்ளடக்கங்களை நாம் மாற்றியமைத்தோம். ஒவ்வொரு மாகாணங்களிலிருந்தும் ஒருவர் என்ற அடிப்படையில், 09 பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு பதவிகளை வகிக்கும் 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், காணி பயன்பாடு தொடர்பிலான தேசிய கொள்கை ஒன்றை தயாரிக்க வேண்டும். காணி பயன்பாடு தொடர்பிலான இணக்கபாட்டினையும் எட்ட வேண்டும்.

காணி தொடர்பிலான மறுசீரமைப்புக்கள் எவையும் மேற்கொள்ளப்படாது என்பதோடு, காணிச் சட்டம் தொடர்பில் தேசிய அளவில் மாற்றங்கள் செய்யப்படும். அதனை செயற்படுத்தும் பணிகள் மாகாண சபைகளிடத்தில் ஒப்படைக்கப்படும். தேசிய காணி ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய அந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும்.” என்றும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!