கனேடியர் தொடர்பில் தொடர்ந்து வெளிவரும் பகீர் தகவல்கள்!

தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு சோடியம் நைட்ரைட் ரசாயனத்தை விற்பனை செய்த கனேடியர் தொடர்பில் மேலும் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நபர் 40 நாடுகளில் மொத்தம் 1,200 விஷப் பொதிகளை அனுப்பியுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில் விரிவான விசாரணைக்கு பின்னர் ஒரு டசின் புதிய குற்றச்சாட்டுகளை அந்த நபர் மீது சுமத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
    
முன்பு ஒன்ராறியோ மாகாணத்தில் 57 வயதான கென்னத் லா என்பவர் மீது ஆலோசனை வழங்குதல் அல்லது தற்கொலைக்கு உதவியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் பதியப்பட்டது.

ஆனால் தற்போது மாகாணம் முழுக்க பல எண்ணிக்கையிலான தற்கொலை சம்பவங்கள் தொடர்பில் கென்னத் லா மீது 12 புதிய குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது. மரணமடைந்தவர்கள் 16 முதல் 36 வயதுடையவர்கள் என யோர்க் பிராந்திய காவல்துறை இன்ஸ்பெக்டர் சைமன் ஜேம்ஸ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும், பிரித்தானியாவில் மட்டும் 88 தற்கொலை சம்பவங்களில் கென்னத் லாவுக்கும் தொடர்பிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது. மட்டுமின்றி கென்னத் லாவின் வாடிக்கையாளர்கள் பட்டியலை ஆய்வு செய்த போது அதில் 200 பேர் பிரித்தானியர்கள் என தெரியவந்துள்ளது.

கென்னத் லா நிர்வகித்துவந்த இணைய பக்கம் ஊடாக 272 பேர் விஷப் பொதி வாங்கியுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தற்போது பதியப்பட்டுள்ள வழக்குகளில் ரொறன்ரோவில் நால்வர் யோர்க் பிராந்தியத்தில் மூவர், டர்ஹாம் பிராந்தியத்தில் ஒருவர்,

லண்டன், ஒன்ராறியோவில் ஒருவர், தண்டர் பே, வாட்டர்லூ பகுதி மற்றும் பீல் பகுதியில் தலா ஒருவர் என உறுதி செய்யபப்ட்டுள்ளது. கனடாவில் மட்டும் 14 தற்கொலை சம்பவங்களில் கென்னத் லா தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கென்னத் லா அனுப்பியுள்ள 1,200 விஷப் பொதிகளில் 160 எண்ணிக்கை கனடா முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மட்டுமின்றி இத்தாலி, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் கென்னத் லா அனுப்பிய விஷப் பொதி குறித்து அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு உதவுவதற்காக அவர் விருப்பத்துடன் ரசாயனத்தை விற்பனை செய்வதாக வெளியான செய்திகளை கென்னத் லா மறுத்துள்ளார்.
  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!