ஐ.நாவில் இந்தியாவுக்கு சிறிலங்கா ஆதரவு – திருப்பதியில் ரணில் அறிவிப்பு

ஐ.நா பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமையை வழங்குவதற்கு சிறிலங்கா முழுமையான ஆதரவு வழங்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் நேற்று வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திருப்பதியில் வழிபாடு செய்வதற்காக நேற்றுமுன்தினம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

நேற்றுமுன்தினம் மாலை சென்னை வந்த அவர், அங்கிருந்த இந்திய விமானப்படையின் உலங்குவானூர்தி மூலம் திருப்பதி ஏழுமலையான் ஆலயத்துக்குச் சென்றார்.

அங்கு நேற்று அதிகாலை வழிபாடுகளை மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர், அதையடுத்து சென்னை வழியாக கொழும்பு திரும்பினார்.

சிறிலங்கா பிரதமரின் வருகையை முன்னிட்டு திருப்பதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஊடகவியலாளர்கள் படங்களை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இதற்கிடையே, திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல் நலம் குறித்தும் சிறிலங்கா பிரதமர் தொலைபேசி மூலமாக, கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் விசாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!