கோத்தாவுக்கு ‘கட்டை’ போடுகிறதாம் அமெரிக்கா – திவயின கூறுகிறது

அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச களமிறங்குவதை தடுப்பதற்கான, நடவடிக்கை ஒன்றில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஈடுபட்டுள்ளதாக, திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

காணாமல்போனோர் குறித்து விசாரணை செய்த அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகமவைச் சந்தித்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்படும் நடவடிக்கைகள் , வெள்ளைக்கொடி சம்பவம், குறிப்பாக, விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டமை தொடர்பாக நடவடிக்கைகளை கோத்தாபய ராஜபக்ச நடைமுறைப்படுத்தினாரா என்பது குறித்து தெரிந்து கொள்வதிலும் அமெரிக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டியுள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்ஸ்வல் பரணகமவின் கருத்தை அறிய திவயின மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!