ஆற்றின் வெள்ளத்தில் பயணிகளுடன் சிக்கிய ஜீப்: – இளைஞர்கள் காப்பாற்றிய அந்த நிமிடங்கள்

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே மோயாறு ஆற்றின் வெள்ளத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுதியிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது தெங்குமரஹடா. இது நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியாகும். இந்த தெங்குமரஹடா பகுதியில் விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாகக் கொண்ட மக்கள் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் தெங்குமரஹடாவிலிருந்து மற்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால், மோயாறு என்னும் ஆற்றைக் கடந்து, அதன்பிறகு கிட்டத்தட்ட 15 கி.மீ அடர்ந்த காட்டினுள் பயணம் செய்து பவானிசாகர் பகுதியைத் தாண்டித்தான் செல்ல முடியும்.

தெங்குமரஹடா மக்கள் மோயாற்றைக் கடக்க பாலமோ, சாலை வசதிகளோ கிடையாது. ஆற்றில் ஓடும் தண்ணீரில் பரிசல் மூலமாகவோ அல்லது வாகனங்களைத் தண்ணீரில் ஓடவிட்டோ தான் ஆற்றைக் கடக்க வேண்டும். காலம் காலமாக தெங்குமரஹடா பகுதி மக்கள் இப்படி உயிரைப் பணயம் வைத்துத்தான் இந்த மோயாற்றினை கடந்துச் செல்கின்றனர். இதற்கிடையே, சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் மோயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பரிசல்களை இயக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இன்று காலை தெங்குமரஹடாவிலிருந்து பவானிசாகருக்குச் செல்ல பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று மோயாற்றைக் கடக்கையில், வெள்ளத்தில் சிக்கி ஆற்றின் நடுவே பழுதாகி நின்றிருக்கிறது. ஆற்றின் நடுவே ஜீப் நின்றதால், அதில் பயணித்த பயணிகள் ஒரு நிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல் திக்கித்துப் போயிருக்கின்றனர். தகவலறிந்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சம்பவ இடத்துக்கு வந்து வெள்ளத்தில் சிக்கிய ஜீப்பில் இருந்தவர்களைப் பத்திரமாக கரைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கடுமையான போராட்டத்துக்குப் பிறகு ஆற்றில் சிக்கியிருந்த ஜீப்பையும் தள்ளி கரையேற்றி விட்டிருக்கின்றனர். மோயாற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கால், தெங்குமரஹடா பகுதி மக்கள் மற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

‘இதுக்கு முன்னாடியே பலதடவை இதுமாதிரி நடு ஆத்துல ஜீப், வேன் என அடிக்கடி நின்னுருக்கு. மோயாற்றைக் கடக்க பாலம் அமைத்து தர வேண்டுமென தெங்குமரஹடா மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் இந்த ஆற்றைக் கடக்குறப்ப உசுரை கையில புடிச்சிக்கிட்டுதான் போறோம். இனியாவது இதுபோன்ற ஆபத்துகள் நடக்காமல் இருக்க அரசு உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இந்த நிலையில், மோயாற்றைக் கடக்க வாகனங்களுக்குத் தடைவிதித்தும், மோயாற்றுக் கரைப் பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து மேற்கொள்ளவும் மாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!