நாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்

முல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, அங்கு சட்டவிரோதமாக குடியேறிய சிங்கள மீனவர்களில் ஒரு பகுதியினர் வெளியேறிச் சென்றனர்.

நாயாறு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அரசியல் செல்வாக்குடன் குடியேறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வந்த சிங்கள மீனவர்களுக்கும், உள்ளூர் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் அண்மைக்காலமாக முறுகல் நிலை நிலவி வந்தது.

சிங்கள மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி முறைக்கு எதிராக தமிழ் மீனவர்கள் போராட்டத்தை நடத்திய நிலையில், தமிழ் மீனவர்களின் எட்டு வாடிகள், படகுகள், இயந்திரங்கள், வலைகள் சிங்கள மீனவர்கள் சிலரால் தீக்கிரையாக்கப்பட்டன.

இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், சிலாபம் பகுதியைச் மூன்று சிங்கள மீனவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், நாயாறுப் பகுதியில் குடியேறிய சிங்கள மீனவர்களில் ஒரு பகுதியினர் சிறிலங்கா காவல்துறையினரின் பாதுகாப்புடன் நேற்று மாலை தமது படகுகள், உடைமைகளை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு வெளியேறினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!