வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது – கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த தொண்டர்கள்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு டில்லியிலுள்ள அவரது இல்லம் மற்றும் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து, இறுதி ஊர்வலம் தொடங்கியது.

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93ஆவது வயதில் நேற்று டில்லியில் காலமானார். அவரது உடல் நேற்று இரவே டில்லி கிருஷ்ண மேனன் பூங்காவிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து வந்த அரசியல் தலைவர்கள் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

காலை 10 மணியளவில் வாஜ்பாய் உடல் அவரது வீட்டில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனம் மூலம் டில்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினர்.

கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கண்ணீர்மல்க வாஜ்பாய்க்கு பிரியாவிடை கொடுத்தனர். அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் வாஜ்பாயின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!