கேரளாவில் மழை வெள்ளத்திற்கு 324 பேர் பலி!

கேரளா மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.

கன மழை காரணமாக கேரளா மின்சார சபை கட்டுப்பாட்டில் இருக்கும் 58 அணைகளும், கேரள நீர் ஆதாரத்துறையின் கீழ் இருக்கும் 22 அணைகளும் முழு கொள்ளளவை எட்டியதும், மீதமுள்ள மொத்த நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இடுக்கி அணையில் இருந்து ஒரு விநாடிக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் லீற்றர் தண்ணீர் வரை கடந்த மூன்று தினங்களாக வெளியேற்றப்படுகிறது. பத்தனம்திட்டா மாவட்டத்தை நேற்று முன்தினம் உலுக்கிய கனமழை, நேற்று ஆலுவா, சாலக்குடி பகுதிகளை புரட்டிப் போட்டது. இன்னும் அப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இடுக்கி, எர்ணாக்குளம், வயநாடு, கோழிக்கோடு, பத்தனம்திட்டா, கண்ணூர், மலப்புரம், பாலக்காடு, திருச்சூர் ஆகிய 9 மாவட்ட மக்களுக்கு நேற்று மழை, வெள்ள எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருந்தது. அடுத்த மாதம் 19ஆம் திகதிக்கு பின்பு கனமழையிலிருந்து கேரளம் மீளும் என கேரள மாநில வளிமண்டல ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு, 2013-ம் ஆண்டி லும் தென்மேற்கு பருவமழை அளவுக்கு அதிகமாக பெய்தது. ஆனால், அப்போது அணைகளில் போதிய தண்ணீர் இல்லாமல் இருந்ததால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.

கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு பாலக்காடு, மலப் புரம், கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, திருச்சூர், கண்ணூர், எர்ணாக்குளம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் இடுக்கியில் மட்டும் வழக்கத்தை விட 84 சதவிகிதம் கூடுதல் மழை பெய்துள்ளது.

இங்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக கொச்சி விமான நிலையம் இம்மாதம் 26ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.

நேற்று மாலை பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324-ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம், மண்சரிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, 1,568 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் தற்போது சுமார் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் 14 இராணுவக் குழுக்கள் தற்போது ஈடுபட்டுள்ளன. அதுதவிர, கடற்படையைச் சேர்ந்த பல்வேறு குழுக்களும், கடலோரக் பொலிஸ்் படையினரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகொப்டர்கள் மற்றும் படகுகள் மூலமாக மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!