முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகக் காட்டுவதற்கு முயற்சி! – ரிஷாட்

விடுதலைப் புலிகளிடமிருந்த அனைத்து ஆயுதங்களும் முஸ்லிம்கள் வசமே இருப்பதாகவும், இதனை வைத்துக்கொண்டே அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர், அரசாங்கத்தை அச்சுறுத்தி, அடிபணிய வைக்க முயல்கின்றனர் எனவும், புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில், அரசாங்கம் உரிய விசாரணையை நடத்தி, உண்மை நிலையைக் கண்டறிய வேண்டுமென, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரியுள்ளார்.

இது குறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘நல்லாட்சி அரசாங்கத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, எவரும் கருத்துகளை வெளியிட முடியும், எனினும், இவ்வாறான நாட்டின் ஆள்புல எல்லை, பாதுகாப்புகளுக்கு அச்சுறுத்தலாகவுள்ள கருத்துகளின் பின்னணிகள் பற்றி, அரசாங்கம் மட்டுமன்றி பொதுமக்களும் அறிவதற்கு உரித்துடையோராக உள்ளனர்.

ஜனநாயக நாடுகளில், அரச படைகள் அன்றி, வேறு எவரும் ஆயுதங்கள் வைத்திருப்பது பயங்கரவாதச் செயற்பாடுகளாகவே நோக்கப்படுகின்றன.அந்த வகையில், புலிகளின் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான நோக்கம் குறித்தும், அமைச்சர்கள் அரசாங்கத்தை அச்சுறுத்துவதற்கான அவசியம் பற்றியும், அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

அரசாங்கத்திடமிருந்து முஸ்லிம்களைப் பிரித்து, பயங்கரவாதிகளாகக் காட்டுவதற்கு இவ்வாறானவர்கள் முயல்கின்றனர். இவர்களை, வெளிநாடுகள் இயக்குகின்றனவா அல்லது உள்ளூர் கடும்போக்காளர்களின் பிரித்தாளும் தந்திரங்களுக்கு சிலர் பலிக்கடாக்களாகியுள்ளனரா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. எனவே, குறித்த நபரின் குற்றச்சாட்டுகள் பற்றி ஆராய்ந்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டுமென, அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!