ஜப்பானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு- சிறிலங்கா பிரதமர் வலியுறுத்தல்

??????????????????????????????????????????????????????????
சிறிலங்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு உடன்பாட்டின் முக்கியத்துவத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா, நேற்று அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க,

”இந்தியப் பெருங்கடலில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து தொடர்பாக சிறிலங்கா எப்போதுமே அர்ப்பணிப்புடன் இருந்து வந்துள்ளது.

வங்காள விரிகுடா நாடுகள் அடுத்த 20 ஆண்டுகளில் சடுதியாக வளர்ச்சியடையும்.

இந்தப் பிராந்தியத்தின் மத்திய துறைமுகமாக திருகோணமலைத் துறைமுகம் மாறும்.

திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பானின் உதவியை சிறிலங்கா எதிர்பார்க்கிறது.” என்று தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்,’திருகோணமலைத் துறைமுகத்தைச் சென்று பார்வையிட்டு, துறைமுகம் மற்றும் அதனைச் சுற்றிய பிரதேசத்தை விளங்கிக் கொள்வேன் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய அமைதி குறித்துப் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர், கெனிச்சி சுகநுமா, ஜப்பானிய பாதுகாப்பு கொள்கைப் பிரிவின் பணிப்பாளர் அகிஹிரோ சுச்சிமிச்சி, கூட்டுப்படைத் தளபதிகளின் உதவித் தலைவர் லெப்.ஜெனரல் தகாஷி மொரோமட்சு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!