மகிந்தவுக்கு பாரத ரத்னா விருது – சுப்ரமணியன் சுவாமி பரிந்துரை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, இந்தியாவின் அதி உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று, பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமைக்காக, மகிந்த ராஜபக்சவுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டுமு் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஒரு கீச்சகப் பதிவை இட்டுள்ளார். அதில்

“நெல்சன் மண்டேலாவுக்கு, அவரது மக்களை விடுவித்ததற்காக நாம் பாரத ரத்னா விருதை வழங்கியதைப் போலவே, மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது மக்களையும் பாரதீயாக்களையும் விடுதலைப் புலிகளிடம் இருந்த விடுவித்ததற்காக, பாரத ரத்ன விருது வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட சுப்ரமணியன் சுவாமி, மெதமுலானவுக்குச் சென்று மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து, புதுடெல்லியில் நடக்கவுள்ள கருத்தரங்கில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!