மன்னார் புதைகுழி – இராணுவம் மீது குற்றச்சாட்டு இல்லையாம்!

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய மனிதப் புதைகுழி தொடர்பாக இராணுவம் மீது யாரும் குற்றம்சாட்டவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். மன்னாரில் சதொச வளாகத்தில் பாரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, அதிலிருந்து எலும்புக்கூடுகளையும் மனித உடல் எச்சங்களையும் மீட்கின்ற பணிகள் சுமார் இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 90இற்கும் அதிகமான எலும்புக்கூடுகள் இந்தப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் கொல்லப்பட்டவர்கள் யார் என்றோ, இவர்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள், யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதோ இன்னமும் தெரியவில்லை. எலும்புக்கூடுகள் அடங்கிய புதைகுழியில், ஆட்களை அடையாளம் காணக் கூடிய உடைகள் உள்ளிட்ட வேறு எந்த தடயப்பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ள சடலங்களுடன் சிறிலங்கா படையினர் தொடர்புபடவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். நிச்சயமாக இராணுவத்துக்கும் இந்தப் புதைகுழிக்கும் எந்த தொடர்பும் இல்லை. யாருமே இராணுவத்தைக் குற்றம்சாட்டவுமில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!