மதுபோதையில் குழப்பம் விளைவித்தவர்களுக்கு 5 ரூபா தண்டம் விதித்த யாழ். நீதிமன்றம்!

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட மூவருக்கு, தலா 5 ரூபா தண்டப் பணம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுபோதையில் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தவர்களுக்கு மதுவரிச் சட்டத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் 2 ஆயிரம் ரூபாவரை தண்டம் அறவிடப்படும் நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸாரால் 1866ஆம் ஆண்டு பொலிஸ் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதால், குற்றவாளிகள் மூவரிடம் தலா 5 ரூபா மட்டும் தண்டம் அறவிடப்பட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் மதுபோதையில் பொது இடத்தில் குழப்பம் விளைவித்த மூவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் திங்கட்கிழமை தனித்தனியே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் வழக்குகள் விசாரணைக்கு வந்தன. குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும் குற்றப்பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. அவர்கள் மூவரும் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டனர். அதனடிப்படையில் மூவருக்கும் பொலிஸ் சட்டத்தின் அடிப்படையில் தலா 5 ரூபா தண்டப்பணம் விதித்து நீதிவான் கட்டளையிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!