கேப்பாப்புலவில் 60 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட வேண்டியுள்ளது

முல்லைத்தீவு கேப்பாப்புலவுப் பகுதியில் தற்போது 60 ஏக்கர் காணியை மாத்திரமே விடுவிக்கப்பட வேண்டியிருப்பதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கிளிநொச்சியில் இன்று தெரிவித்தார்

இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவன் கஜனின் குடும்பத்தினருக்கு புதிய வீட்டினை கையளித்த பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த மூன்று வருடங்களில் படையினரிடமிருந்து 6009 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் கேப்பாப்புலவுப் பகுதியில் பொதுமக்களின் 470 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 153 மில்லியன் ரூபா நிதி பாதுகாப்புத் தரப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்னமும் 60 ஏக்கர் காணிகள் மாத்திமே கேப்பாப்பிலவில் விடுவிக்கப்படவேண்டியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த காணிகளை விடுவிக்கக்கோரி கேப்பாபிலவு மக்கள் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இன்று வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!