அட்மிரல் விஜேகுணரத்னவை கைது செய்ய நீதிவான் உத்தரவு

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, கோட்டே நீதிவான் நீதிமன்ற நீதிவான், லங்கா ஜெயரத்ன நேற்று உத்தரவிட்டார்.

2008-09 காலப்பகுதியில் கொழும்பு நகரப் பகுதியில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று கோட்டே நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபராகத் தேடப்பட்டு வந்த நேவி சம்பத், விசாரணையில் இருந்து தப்பிக்க வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்கு, அட்மிரல் விஜேகுணரத்ன உதவினார் என்பதை நிரூபிக்க சாட்சியங்கள் உள்ளன என்று என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி நிசாந்த சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை, சந்தேக நபரான நேவி சம்பத் வங்கி மூலம் பெற்ற 5 இலட்சம் ரூபா பற்றிய வங்கி பரிமாற்ற தரவுகள் இன்னமும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து, சந்தேக நபரான நேவி சம்பத் தப்பிச் செல்வதற்கு அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உதவினார் என்பதை நிரூபிக்க போதிய சான்றுகள் இருப்பின் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டே நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!