வடக்கில் சிங்களவர்களைக் குடியேற்றுகிறது அரசாங்கம்! – டிலான் பெரேரா

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக கூறும் அரசாங்கம், தமிழ் மக்களின் கண்களை மூடி விட்டு வடக்கில் சிங்களவர்களை பலவந்தமாக குடியேற்றி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட டிலான் பெரேரா ,அரசாங்கம் நல்லிணக்கத்தை செயற்படுத்தி வருகின்றது என்றால், பலவந்தமாக வடக்கில் சிங்களவர்களை அழைத்துச் சென்று குடியேற்ற முடியாது. அப்படியானால் தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கத்தை செயற்படுத்துவதில்லை. தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் மாத்திரமே அரசாங்கம் நல்லிணக்கத்தை செயற்படுத்தி வருகிறது.

நல்லிணக்கத்தை செயற்படுத்துவதாக கூறும் அரசாங்கம், வடக்கில் சிங்களவர்களை அழைத்துச் சென்று குடியேற்றுமாயின் அரசாங்கம் நல்லிணக்க செயற்பாடுகளில் தோல்வியடைந்துள்ளது என்றே அர்த்தம்.அரசாங்கம் தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை வழங்குவதில்லை. அபிவிருத்தி செய்வதில்லை. வீதிகளை அமைப்பதில்லை. நல்லாட்சியும் இல்லை. தமிழ் மக்களின் கண்களை மூடி விட்டு, சிங்கள மக்களை அழைத்துச் சென்று குடியேற்றுகிறது.

நல்லிணக்கத்தில் தோல்வியடைந்துள்ள இந்த அரசாங்கத்திற்கு, சிங்கள,தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் இல்லாமல் போயுள்ளது. செப்டம்பர் 5 ஆம் திகதி அதனை வீதியில் பார்க்க முடியும் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!