அமெரிக்காவில் கதிகலங்கி ஓடிய திருடன்: – திருடச் சென்ற இடத்தில் இப்படியும் ஒரு சங்கடம்

அமெரிக்காவில் உள்ள கொலராடோ நகரில் உள்ள கடை ஒன்றில் திருடச் சென்ற திருடனுக்கு எதிர்பாராமல் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. கொலராடோ, அரோரா எனும் இடத்தில் இ-சிகரெட் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த 2-ம் தேதியன்று திருடுவதற்காக திருடன் ஒருவர் உள்ளே புகுந்துள்ளார்.

அப்போது, நடந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான மக்களின் பார்வையை ஈர்த்துள்ளது அந்த வீடியோ. அந்த வீடியோவில், தலையில் தொப்பியுடன், சன்கிளாஸ்கள் அணிந்த ஒருவர் கடையின் உள்ளே செல்கிறார். அப்போது, வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மிரட்ட முயன்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராமல் துப்பாக்கித் தவறி கீழே விழுந்துவிட்டது. சினிமாவைப்போல அந்தத் துப்பாக்கியை எடுக்கக் கடைக்காரரும் திருடனும் போட்டி போட்டுள்ளனர். இதில் கடைக்காரர் கையில் துப்பாக்கி கிடைத்துவிட்டது. இதை எதிர்பார்க்காத திருடன், பதறிப்போய் கடையை விட்டுத் தப்பித்து ஓட முயன்றிருக்கிறார். அப்போது, திருடனுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர், அணிந்திருந்த பேன்ட் எதிர்பாராமல் அவிழ்ந்துவிட, உடனடியாக அதைச் சரிசெய்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இத்தகைய தர்மசங்கடமான நிலைமையைச் சமாளித்து திருடன் தப்பி ஓடும் காட்சி காண்போரை நகைப்படையச் செய்ய வைத்துள்ளது.

இந்த வீடியோவை வெளியிட்ட 12 மணி நேரத்திலே 23,000-க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதனுடன், கமென்ட்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவில் பதிவான திருடனின் அடையாளத்தை வைத்து, அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் கொலராடோ போலீஸார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!