நல்லிணக்கம், அபிவிருத்திக்கு உதவத் தயார்! – ஜனாதிபதிக்கு சர்வதேச அமைப்புகள் உறுதி

அபிவிருத்தி, மற்றும் நல்லிணக்க நோக்கங்களுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவுள்ளதாக இலங்கைக்கு உதவி வழங்கும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சர்வதேச நிறுவன பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று முன்தினமிரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி [USAID], சர்வதேச நாணய நிதியம், சர்வதேச அபிவிருதிக்கான ஐக்கிய அமெரிக்க உதவி நிறுவனம், கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனம் [KOKA] ஆகிய முக்கிய சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

நீண்டகாலமாக இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்த சர்வதேச நிதி நிறுவனங்கள் வழங்கிவரும் உதவிகளை பாராட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் இந்நாடுகளிடமிருந்து விரிவான ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி,நாட்டின் சகல பகுதிகளிலும் சமமான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. யுத்தத்தால் அழிவுற்ற வடக்கு, கிழக்கு பிரதேசங் களை அபிவிருத்தி செய்து அம்மக்களுக்கு அபிவிருத்தி உரிமையை பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. குடிநீர் பிரச்சினை, வறுமை ஒழிப்பு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களை இலங்கை எதிர்பார்க்கின்றது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!