இந்தியாவின் கையில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் – ஏமாந்தது சீனா

இழுபறியில் இருந்து வந்த- வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 40 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை சீனாவின் தொடருந்துக் கட்டுமான நிறுவனத்துக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.

இதற்கான நிதியை வழங்குவதற்கு சீனாவின் எக்சிம் வங்கியும் முன்வந்தது.

இதற்கு இந்தியத் தரப்பில் இராஜதந்திர ரீதியாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், நிரந்தரமான கல்வீடுகளைத் தான் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் எதிர்ப்பை வெளியிட்டது. இதனால் இந்தத் திட்டம் இழுபறியாக இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைப்பதென முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான இந்திய அரசுடன் பேச்சு நடத்தி விரைவில் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலர்களுடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.

அதேவேளை, வடக்கு, கிழக்கில் மேலும் 25 ஆயிரம் நிரந்தர கல் வீடுகளை அமைக்கும் மற்றொரு திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவொன்றின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவரும் உள்ளடக்கப்படவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!