கணனிகளை முடக்கி ரூ.7 ஆயிரம் கோடி திருடிய வடகொரியா இன்ஜினியர்: -அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு

இணையதள தாக்குதல் நடத்தி கம்ப்யூட்டர்களை முடக்கி ரூ.7 ஆயிரம் கோடி திருடிய வடகொரியா இன்ஜினியர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் 2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை பல்வேறு நாடுகளில் அடிக்கடி இணையதள தாக்குதல் நடத்தப்பட்டது. கம்ப்யூட்டர் சர்வர்கள் முடக்கப்பட்டன. குறிப்பாக 2014ம் ஆண்டு சோனி பட பொழுதுபோக்கு மையம், நிதித்துறை நிறுவனங்கள், ராணுவம், தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு முடக்கப்பட்டன.

2016ல் வங்கதேச வங்கியை இணையதளம் மூலம் முடக்கி ரூ.581 கோடி திருடப்பட்டது. 2017ல் உலகம் முழுவதும் உள்ள முக்கிய நிறுவனங்களின் கம்ப்யூட்டர்கள் முடக்கப்பட்டன. குறிப்பாக, இங்கிலாந்து நாட்டில் மருத்துவத்துறை இதனால் முடங்கியது. இவ்வாறு நடந்த இணையதள தாக்குதல் மூலம் ரூ.7 ஆயிரம் கோடி திருடப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.இந்த தாக்குதலால் அமெரிக்காவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுபற்றி அமெரிக்க நீதித்துறை ரகசியமாக விசாரணை நடத்தி வந்தது. அப்போது வடகொரியா உதவியுடன் அந்த நாட்டை சேர்ந்த கம்ப்யூட்டர் புரோகிராமர் பார்க் ஜின் யோக் என்பவர் இதை செய்தது தெரியவந்தது.

இதுபற்றி அறிந்ததும் ஜூன் 8ம் தேதி அவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குப்பதியப்பட்டது. நேற்று முதல் முறையாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. வடகொரியா உதவியுடன் பல ஆண்டுகளாக பார்க் ஜின் யோக் உலகம் முழுவதும் இந்த தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. முதல்குற்றமாக கம்ப்யூட்டர் மோசடி என்றும் இரண்டாவது இணையதள நிதி மோசடி என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.வடகொரியா அரசு உதவியுடன் செயல்படும் லெசாரஸ் குழுமத்தில் பார்க் ஜின் யோக் பணிபுரிந்து வந்துள்ளார். அதில் இருந்து இணையதள தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!