மைத்திரி, கோத்தா படுகொலைச் சதி – விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்க உத்தரவு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்வதற்கான சதித் திட்டம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்ளவுள்ளது.

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சிறப்பு புலனாய்வுக் குழுவொன்றை நியமித்திருந்தார்.

எனினும், இந்த விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவே முன்னெடுக்கும் என்றும், அவர்கள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தாம் காவல்துறை மா அதிபருடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவர் நேற்று நடத்திய ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

அதேவேளை, இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார் என்று காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!